மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அகவிலைப்படியை 2% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இந்த உயர்வு ஜனவரி 1 முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால் 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கணிக்கப்படுகிறது.
மேலும், இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு வருடத்திற்கு ₹6,614 கோடி கூடுதல் செலவாகும் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், 3% உயர்வு செய்யப்பட்ட நிலையில், அகவிலைப்படி 53%-இல் இருந்து 55%-ஆக உயர்கிறது. அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஒருமுறை, அகவிலைப்படி திருத்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.