மதுரை: திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வீ.கே.குருசாமி உறவினரின் கொலை வழக்கில் தொடர்புடைய நபரைக் கைது செய்ய தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கூடல்புதூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22-ம் தேதி, மதுரை தனக்கன்குளம் அருகே மொட்டமலை பகுதியில், கிளாமர் காளி என அழைக்கப்படும் காளீஸ்வரன் (வயது 27) என்பவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்த நிலையில், காளீஸ்வரன் கொலையில் தொடர்புடைய மதுரைச் சேர்ந்த 'சுள்ளான்' பாண்டி தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக ஆய்வாளர் பாலமுருகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
சுள்ளான் பாண்டிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால், அவரை போலீசார் கைது செய்யவில்லை. அதேசமயம், அவர் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு கூட்டங்களில் குற்றவாளிகள் குறித்த தகவலை தவிர்த்ததாகவும், அவரது அலட்சியம் குறித்து புகார்கள் வந்ததால் இந்த பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.