நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள துலுக்க சூடாமணி அம்மன் கோவிலில் தேர் திருவிழாவை நடத்த ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரி பெரியசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு இன்று வந்தது. இதன்போது, மனுதாரர் தரப்பில், பிற சமுதாய மக்களுக்கு விழாவை நடத்த அனுமதி வழங்கியிருக்கிறது. இது போல இந்த ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்கும் ஏதாவது ஒருநாள் ஒதுக்கி விழாவை நடத்த அனுமதி வழங்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டப்பட்டது.
அத்துடன், கோவில் திருவிழா அழைப்பிதழில், சாதிப் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ஏற்கெனவே, அறநிலையத்துறை தரப்பில், பொதுவாக இனிவரும் நாட்களில் கோவில் திருவிழாக்களின் அழைப்பிதழ் மற்றும் நோட்டீஸில் சாதிப் பெயர்களை தவிர்க்க வேண்டும் என சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்து அறநிலையத்துறைக்கு கோவில் திருவிழாக்களில் சாதி பெயர்கள் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்றும், கோயில் திருவிழாக்களில் சாதிக்கு இடமில்லை எனும்போது மனுதாரரின் கோரிக்கை துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியள்ளார்.
அத்துடன், கோவில்களில் திருவிழாக்களில் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு முதல் பக்தர்கள், உபயதாரர்கள் அல்லது ஊர் பொதுமக்கள் என்ற அடிப்படையில் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், சாதிப் பெயருடன் விழா நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிபதி கூறி, இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.