பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்கபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் என்ற 65 வயது முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென கடந்த வாரம் காணாமல் போன நிலையில் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த முதியவர் வாழ்ந்து வந்த கிராமத்தின் பக்கத்து கிராமத்தில் மனித எலும்புக்கூடுகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் அங்கு சென்றபோது காணாமல் போன முதியவரின் செருப்புகள் அந்த இடத்தில் கிடந்தது தெரியவந்தது. பின்னர் அந்த இடத்திற்கு மோப்பநாய் கொண்டுவரப்பட்ட நிலையில் அது ஒரு மந்திரவாதியின் வீட்டிற்கு சென்றது.
இதைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது மந்திரவாதியான ரமாஷிஷ் ரிக்யாசன் என்பவருடன் சேர்ந்து சுதிர் பாஸ்வான் என்பவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என நினைத்து பூஜை செய்துள்ளார். அப்போது மந்திரவாதி ஒரு மனிதனின் தலையை தீயில் எரிக்க வேண்டும் எனவும் அப்போது தான் குழந்தை பிறக்கும் என்றும் சுதிரிடம் கூறியுள்ளார்.
இதனால் அவர்கள் அந்த முதியவரை கடத்தி கொலை செய்து தலையை துண்டித்து தீயில் போட்டு எரித்துள்ளனர். இதேப்போன்று மற்றொரு இளைஞரையும் கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளனர். இதைத்தொடர்ந்து சுதீர் மற்றும் அந்த மந்திரவாதியின் மூன்று சீடர்களை போலீசார் கைது செய்தனர். அந்த மந்திரவாதி தற்போது தலைமறைவான நிலையில் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.