மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பொதுப் பேருந்தில் ஒரு பயணியை நடத்துனர் அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பேருந்தில் நடத்துனர் பயணி ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை மற்றொரு பயணி வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென “வீடியோ எடுக்காதே” எனக்கூறி நடத்துனர் திரும்பி அந்தப் பயணியை அறைந்தார். மேலும் அந்தப் பயணியின் மொபைல் போனை பறிக்க முயற்சித்தார். இதனை அருகில் இருந்த மற்றொரு பயணி “வீடியோ எடுக்க கூடாதா” என நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் அருகில் இருந்த பயணிகள் தகராறு தீவிரமாகாமல் தடுக்க இருவரையும் அமைதிபடுத்த முயன்றனர். இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பயணி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அமைச்சர் நித்திஷ் ராணே மற்றும் மும்பை நகர காவல் துறையினரை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பதிவில் கோரிக்கை வைத்துள்ளார்.
மும்பை மாநகர காவல் துறையினர் இந்த வீடியோவிற்கு பதிலளித்து பதிவு வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவில் இது தொடர்பாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்க கேட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.