தங்கம் வைப்பு திட்டத்தை கைவிட்ட அரசு - விலை உயர்வுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?
BBC Tamil April 02, 2025 08:48 PM
Getty Images

இந்தியாவில் எளிய மக்களின் வாழ்வில், தங்கம் ஒரு முக்கியமான முதலீடாகப் பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டாலும், தங்கம் ஒரு நிலையான முதலீடு என்பதால், மக்கள் மனதில் தங்கத்திற்கு நீங்கா இடம் உள்ளது.

நகை, நாணயம், கட்டித் தங்கம், பத்திரங்கள் எனப் பல்வேறு வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தங்கம் வைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியை சமீபத்தில் இந்திய அரசு நிறுத்தியுள்ளது.

தங்கம் வைப்புத் திட்டம் என்றால் என்ன? இதன் ஒரு பகுதியை அரசு நிறுத்துவதற்கான காரணம் என்ன? இதற்கும் டிரம்பின் நடவடிக்கைகளுக்கும் தொடர்பு உள்ளதா?

தங்கம் வைப்புத் திட்டம் என்றால் என்ன? Getty Images

தங்க வைப்பு நிதித் திட்டம் (Gold Monetisation Scheme - GMS) என்பது இந்திய அரசாங்கத்தால் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம்.

இந்தியாவில் தனிநபர்களிடமும் நிறுவனங்களிடமும் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. நாட்டில் தங்க இறக்குமதியைக் குறைத்து, அந்நிய செலாவணி நிதியைச் சேமிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

தங்கம் வைத்திருப்பவர்கள் (தனிநபர்கள், நிறுவனங்கள்), அதை (தங்கக் கட்டிகள், நாணயங்கள், நகைகள்) வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். இந்தத் தங்கம் மதிப்பீடு செய்யப்பட்டு, டெபாசிட் செய்தவருக்கு ஒரு சான்றிதழுடன் சேர்த்து தங்கத்தின் மீது வட்டி வழங்கப்படும்.

இந்தத் திட்டம் முதிர்ச்சி அடையும்போது அதே அளவு தங்கத்தையோ அல்லது அதற்குச் சமமான பணத்தையோ திரும்பப் பெறலாம்.

இந்தத் திட்டம் மூன்று கூறுகளைக் கொண்டிருந்தது:

  • குறுகிய கால வங்கி வைப்பு (1-3 ஆண்டுகள்)
  • நடுத்தர கால அரசு வைப்பு (5-7 ஆண்டுகள்)
  • நீண்ட கால அரசு வைப்பு (12-15 ஆண்டுகள்)
Getty Images

குறுகிய கால வங்கி வைப்பின் கீழ் தங்கத்தின் மீதான வட்டி விகிதம் வங்கிகளைப் பொறுத்து மாறுபடும். நடுத்தர கால அரசு வைப்பில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 2.25 சதவீதம் என்றும் நீண்ட கால அரசு வைப்பில் ஆண்டுக்கு 2.5 சதவீதம் என்றும் வழங்கப்படும். இந்த வட்டியானது ஆண்டுக்கு எளிய வட்டியாகவோ அல்லது முதிர்ச்சியின்போது ஆண்டுக்குக் கூட்டப்படும் கூட்டு வட்டியாகவோ வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தங்கம் வைப்பு 10 கிராம் (நகை, கட்டிகள், நாணயங்கள்). அதிகபட்ச வரம்பு என எதுவும் இல்லை.

தங்க வைப்பு நிதித் திட்டத்தின் செயல்திறன் மற்றும் மாறி வரும் சந்தை நிலைகளை ஆராய்ந்த பிறகு, தற்போது இதில் நடுத்தர கால அரசு வைப்பு மற்றும் நீண்ட கால அரசு வைப்பு ஆகிய இரண்டையும் நிறுத்தப் போவதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது மார்ச் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால வங்கி வைப்பில் எந்தவொரு மாற்றமும் இல்லை. ஏற்கெனவே வழங்கப்பட்ட நடுத்தர மற்றும் நீண்ட கால அரசு வைப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் அவை முதிர்ச்சி அடையும் வரை அல்லது முன்கூட்டியே திரும்பப் பெறப்படும் வரை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி நிர்வாகிக்கப்படும். இதை மேற்கொண்டு புதுப்பிக்க முடியாது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்கம் வைப்புத் திட்டத்தின்படி மொத்தமாக சுமார் 31 ஆயிரம் கிலோ தங்கம் திரட்டப்பட்டுள்ளது.

Getty Images

சமீபத்தில் இந்திய அரசாங்கத்தால் நிறுத்தப்பட்ட தங்கத்தில் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்களில் இந்த தங்கம் வைப்புத் திட்டமும் ஒன்று. இதற்கு முன்பாக தங்கப் பத்திரம் திட்டத்தையும் அரசு நிறுத்தியது.

"தங்கம் வைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை அடையும் என்பதை அரசு எதிர்பார்க்கவில்லை. மேலும் இந்தத் திட்டத்தை நிர்வகிப்பதில் அரசுக்கு கூடுதல் சிரமங்கள் மட்டும் இருந்ததே தவிர, அதனால் ஒரு பலனும் இல்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டதால் தற்போது இந்தத் திட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று சென்னைப் பல்கலைக் கழக பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானம் பிபிசி தமிழிடம் கூறினார்.

கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 57,000 ரூபாயாக இருந்தது. ஆனால் அது தற்போது (ஏப்ரல் 2025) சுமார் 68,000 ரூபாயாக இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 19 சதவீதம் அதிகமாகியுள்ளது.

தங்கத்தின் விலை அதிகரித்தமைக்கான காரணமே விலைவாசி உயர்வுதான் என்று ஜோதி சிவஞானம் குறிப்பிடுகிறார்.

"விலைவாசி உயர்வின்போது பங்குச் சந்தையில் ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. சர்வதேச அளவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இதுபோன்ற காரணிகளால் தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த அரசு வாங்கிக் கொள்வது என்பது ஒரு வகையில் கடன் வாங்குவதைப் போன்றதுதான். இந்தத் திட்டத்தில் கடன் வாங்கும் செலவு, நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்தைவிட அதிகமாக இருந்தால், அரசாங்கம் மக்களுக்கு அதிக அளவில் பணம் செலுத்த வேண்டியிருந்தது. இது இந்திய அரசுக்கு மிகப் பெரிய பாரமாக இருந்தது" என்று குறிப்பிடுகிறார்.

BBC ஜோதி சிவஞானம்

"சர்வதேச பொருளாதார சந்தையின் கூறுகளினால் தீர்மானிக்கப்படும் டாலர் மதிப்பு மற்றும் தங்கத்தின் விலையை இந்திய அரசு வரி விதிப்பு, பொருளாதார கொள்கைகள் மூலமாகக் கட்டுப்படுத்த முயன்று வருகிறது.

தற்போது புவிசார் அரசியல் ரீதியான பதற்றங்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்புக் கொள்கைகள் காரணமாக மேலும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் ஏற்படலாம். இதனால் அரசாங்கம் ஒரு முன்னெச்சரிக்கை முயற்சியாக இந்தத் திட்டத்தை நிறுத்தியுள்ளது" என்கிறார் ஜோதி சிவஞானம்.

"தங்கம் விலை என்னதான் உயர்ந்தாலும், பொதுமக்களுக்கு வங்கியில் நிலையான வைப்புத் தொகை, தொடர் வைப்புத் தொகை போல முதலீடு செய்வதற்குப் பல எளிய, அதிக வட்டி பெரும் வழிகள் இருக்கும்போது, அவர்கள் ஏன் வெறும் 2 சதவீத வட்டி மட்டுமே வரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப் போகிறார்கள்?

இதனால் இந்தத் திட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பயனாளர்களே இருந்தனர். இவர்களை வைத்து மட்டும் அந்நிய செலாவணி கையிருப்பை மேலாண்மை செய்யும் இந்தத் திட்டத்தை நடத்துவது ஒரு சுமை என்று அரசுக்கு மிகவும் தாமதமாகவே புரிந்துள்ளது" என்று அவர் கூறினார்.

அரசாங்கம் தங்கத்தின் முதலீட்டை நிர்வகிப்பதில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டுவரக் கூடாது என்று ஜோதி சிவஞானம் தெரிவிக்கிறார்.

"அரசாங்கம் ரூபாயின் மதிப்பை அதிகரிக்கவும், அந்நிய செலவாணி நிதியைச் சீராக நிர்வகிக்கவும் முயற்சிகளை எடுக்க வேண்டும். அதற்கு ஏற்றுமதியை அதிக்கப்படுத்தி, உள்நாட்டுக் கடனைக் குறைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். தங்கத்தின் பரிவர்த்தனை மற்றும் முதலீட்டின் மீது கடும் விதிகளை விதித்தால் அது சட்டவிரோத தங்கக் கடத்தலுக்கே வழிவகுக்கும்" என்றும் கூறினார் ஜோதி சிவஞானம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.