“குப்பை இல்லா நகரம் கேட்டேன்” என்று பெங்களூர்வாசிகள் கதறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த வருடம் முழுக்கவே பெங்களூரில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடிய நிலையில், இன்னொரு பக்கம் காற்றை புகை மண்டலங்கள் சலவை செய்ததைப் போல கார்டன் சிட்டி என்று பெயரெடுத்த பெங்களூரில் சமீப காலங்களாக காற்று மாசு அதிகரித்து வருவது அந்நகர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது பெருகி வரும் வேலைவாய்ப்பு காரணமாக பெங்களூரில் மக்கள் தொகை அடர்த்தியும் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரு அடுத்தடுத்து குப்பைகள் மிகுந்த நகரமாகவும் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் பெங்களூரில் குப்பை மீது வரி, பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு போன்றவை அமலுக்கு வந்துள்ளன.
ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பால், மின்சார கட்டண உயர்வு, குப்பைக்கு வரி விதிப்பு போன்றவற்றை பொது மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், 200 யூனிட்டிற்கு கீழ் இலவச மின்சாரம், மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை, 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை என ஐந்து முக்கிய வாக்குறுதிகளையும் மாநில அரசு அமல்படுத்தி மக்களை குஷிபடுத்தியது.
அதே சமயம் இந்த திட்டங்களுக்காக வருடத்திற்கு ரூ.56,000 கோடி செலவிடப்படுகிறது. இதனால், மற்ற திட்டங்களுக்கும், தொகுதிகளுக்கும் பணம் ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது அரசின் நிதி நிலைமை மோசம் அடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இதை சரிசெய்வதற்காக அரசு, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
வாக்குறுதி என்கிற பெயரில் ரூ.10 மக்களுக்கு கொடுத்துவிட்டு, இப்போது வரி என்கிற பெயரில் ரூ.100 வசூலிப்பதாக மக்கள் குறை கூறத் தொடங்கியுள்ளனர்.