விண்வெளியிலிருந்து மார்ச் மாதம் 19ம் தேதி பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் தனது தந்தையின் நாடான இந்தியாவுக்கு கண்டிப்பாக வரவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் விண்வெளியிலிருந்து பார்க்கும் போது இமயமலைகள் மிகவும் அழகாக காட்சி தருவதாகவும் கூறினார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் கிட்டத்தட்ட 10 மாதங்கள் தங்கியிருந்து பூமி திரும்பியுள்ள இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் சென்ற மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
பூமிக்கு திரும்பிய பிறகு முதல் முறையாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விண்வெளியில் நீண்டகாலம் செலவிட்டது குறித்து அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் பகிர்ந்து கொண்ட தகவல்கள் மற்றும் சுவாரஸ்ய உரையாடல்கள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
விண்வெளியிலிருந்து இந்தியா எப்படி தெரிகிறது? என்று கேட்டதற்கு, "இந்தியா அற்புதமானது. ஒவ்வொரு முறையும் இமய மலைகளுக்கு மேலே செல்லும் போதும் எனது கூட்டாளி புட்ச் வில்மோர் சில ரம்யமான புகைப்படங்களை எடுத்தார். புவியின் டெக்டானிக் தட்டுகள் இடித்து அதன் விளைவாக உருவான இமயமலை ஒருபுறம், அங்கிருந்து குஜராத் மும்பை பக்கம் வந்தால் அழகிய கடல் என மிகவும் வண்ணமயமாக தெரிகிறது" என்று தெரிவித்தார்.
தனது தந்தையின் நாடான இந்தியாவுக்கு கண்டிப்பாக செல்வேன் என்றும் அங்கு மக்களை சந்தித்து பேசுவேன் என்றும் சுனிதா கூறினார்.
"ஆக்சியம் (Axiom) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் விண்வெளி வீரர் ஒருவர் செல்லவுள்ளார். அது எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. அவருக்கு இங்கும் ஒரு சொந்த ஊர் அமையப் போகிறது. சர்வதேச விண்வெளி மையம் எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பது பற்றி அவருடைய பார்வையில் அவரால் பேச முடியும். ஏதாவது ஒரு தருணத்தில் அவரை சந்தித்து பேச முடியும் என்று நம்புகிறேன்,
எங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன், இந்தியா ஒரு மகத்தான நாடு, ஒரு சிறப்பான ஜனநாயக நாடு. விண்வெளியில் கால் பதிக்க முயன்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக இருக்கவும், அதில் அவர்களுக்கு உதவி செய்யவும் விரும்புகிறேன்" என்று கூறினார்.
உங்கள் குழுவினரையும் அழைத்துச் செல்ல திட்டமிருக்கிறதா என்று புட்ச் வில்மோர் சிரித்துக் கொண்டே கேட்ட போது, சுனிதா வில்லியம்ஸ் கண்டிப்பாக அழைத்துச் செல்ல போகிறேன், நீங்கள் கூடவே வரலாம், உங்களுக்கு சில காரமான உணவுகளை வழங்குகிறேன் என்று பதிலளித்தார்.
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியவுடன் செய்ய நினைத்தது என்னவென்று கேட்டபோது, " எனது கணவரையும் எனது நாய்களையும் கட்டி அணைக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை கொண்டிருந்தேன்" என்றார்.
மேலும், "வீட்டில் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துவது உணவு, நான் வீடு திரும்பிய போது சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடும் எனது தந்தை எனக்கு சீஸ் சாண்ட்விட்ச் செய்து கொடுத்தார்.
நியூ இங்கிலாந்தில் வீடு உள்ளது. அங்கு கோடைக்கால விடுமுறைக்கு செல்லவுள்ளோம். விண்வெளியில் இருந்து திரும்பி வந்த பிறகு, அமைதியாக வீட்டில் இருப்பது கடினம். அங்கிருந்து பூமியில் உள்ள பல நல்ல இடங்களை பார்த்திருப்போம்" என்று தெரிவித்தார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்து வர வேண்டும் என்பதற்காக, விண்வெளிக்கு செல்லவிருந்த விண்வெளி வீரர் சீனா கார்ட்மேன் தனது இருக்கையை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. அதாவது அவரது விண்வெளி பயணம் தள்ளிபோனது.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய போது, சீனா கார்ட்மேனை பார்த்து கட்டி அணைத்துக் கொண்டார்.
இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, "சீனா கார்ட்மேன் சிறந்த விண்வெளிவீரர், அவருக்கு அந்த நேரத்தில் அந்த விண்கலத்தில் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை, அவருக்கு மற்றொரு தருணத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆம், அவர் எனக்காக அந்த இருக்கையை விட்டு கொடுக்க வேண்டியிருந்தது. எங்கள் குழுவில் அனைவரும் அப்படி தான்." என்றார்.
புவியீர்ப்பு விசை மிகவும் குறைவாக இருக்கும் இடத்தில் மாதக்கணக்கில் இருந்து விட்டு பூமி திரும்பியுள்ள நிலையில், சுனிதா மற்றும் புட்ச் வில்மோரின் உடல் நிலை எவ்வாறு இருக்கிறது, அவர்கள் பூமியில் இயல்புக்கு நிலைக்கு திரும்ப எத்தனை காலமாகும் என்று எல்லாம் பல கேள்விகள் நிலவின.
அது சம்பந்தமாக பேசிய சுனிதா வில்லியம்ஸ் தன்னால் இப்போது ஓடவும் முடிகிறது என்று குறிப்பிட்டார், அதையே அவரது கூட்டாளி புட்ச் வில்மோரும் கூறினார்.
சுனிதா வில்லியம்ஸ், "உங்கள் உடல் எப்படி தகவமைத்துக் கொள்கிறது என்பது அற்புதமாக உள்ளது. முதல் நாள் நாங்கள் பூமிக்கு வந்த போது நாங்கள் அனைவருமே சற்று தளர்ந்து இருந்தோம். 24 மணி நேரங்களில் நரம்பு மண்டலம் இயல்பாக செயல்பட தொடங்குகிறது, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று மூளை புரிந்துக் கொள்கிறது. அடுத்த ஒரு வாரத்தில் பளு தூக்க முடிகிறது, ஓட முடிகிறது." என்று தெரிவித்தார்.
சுனிதாவின் வருகையை மிகவும் ஆர்வமாக பல பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர் பூமிக்கு திரும்பும் காட்சிகளை ஒன்றாக கூடி மாணவர்கள் பார்த்தனர்.
அந்த மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் என்ன கூற விரும்புகிறார் என்று கேட்ட போது, உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும், திசை மாறாமல் அதை நோக்கியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்த விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
"நாங்கள் திரும்பி வந்துவிட்டோம். நாங்கள் திரும்பி வருவோம் என்பது தான் எப்போதுமே திட்டமாக இருந்தது. அதை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இது வித்தியாசமான பயணமாக அமைந்தது, இதிலிருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டோம்.
மீண்டெழுதல் அதில் ஒன்றாகும். திட்டத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்ட போது அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம் என்ற செய்தி தான் குறிப்பாக குழந்தைகளிடம் நான் சொல்ல விரும்புவது. நீங்கள் செய்ய நினைப்பதை வாழ்க்கையில் நேரடியாக செய்து விட வேண்டும் என்று நினைக்கலாம்.
ஆனால் சில நேரங்களில் இடதுபுறம் அல்லது வலதுபுறம் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் எப்போதும் இலக்கில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு பல கதவுகள் திறக்கும்" என்றார்.
பலவிதமான அவசர நிலைகளுக்கு தயாராகவே இருந்ததாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் தெரிவித்தனர். விண்வெளி வீரர்களாக அதற்கான பயிற்சிகளும் தயாரிப்புகளும் தங்களுக்கு இருந்ததாகவே அவர்கள் தெரிவித்தனர்.
"இது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் குறித்தது மட்டும் கிடையாது. சர்வதேச விண்வெளி மையத்தில் பல அறிவியல் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாவற்றுக்கும் பல முயற்சிகள் தேவைப்படுகின்றன.
அதை எல்லாம் பயின்று தயாரிப்புடனே இருந்தோம். மேலும் பூமியில் ஒரு பெரிய குழு இயங்கிக் கொண்டிருக்கிறது, எங்களை பூமிக்கு கொண்டுவர எது சரியான நேரம் என்று அவர்களுக்கு தெரியும் என்று எங்களுக்கு தெரியும். அந்த முடிவை அவர்கள் எடுக்கும் வரை காத்திருக்க நாங்கள் தயாராகவே இருந்தோம்" என்று கூறினார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு