மியான்மரில் மார்ச் 28ம் தேதி 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இரவு பகலாக கடந்த 4 நாட்களாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலநடுக்கம் மியான்மரின் மையப்பகுதியான மண்டலே மற்றும் சாகைங் பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. அதைப்போல, நூற்றுக்கணக்கான குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், மடங்கள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன.
முன்னதாக மியான்மரின் இராணுவ அரசு மார்ச் 30ம் தேதி பலியானவர்கள் எண்ணிக்கை 1,644 ஆக இருந்தது. மார்ச் 31 நிலவரப்படி 1,700 ஆகவும், ஏப்ரல் 2ம் தேதி இதுவரை 2,719 பேர் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் இறப்பு எண்ணிக்கை 3,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர், மற்றும் இன்னுமே நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த பேரழிவை சமாளிக்க, மியான்மர் அரசு அரிதாக சர்வதேச உதவியை கோரியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இந்தியா “ஆபரேஷன் பிரம்மா” என்ற பெயரில் மீட்பு மற்றும் மருத்துவ குழுக்களை அனுப்பியது, மேலும் 137 டன் நிவாரண பொருட்களை வழங்கியது.
மண்டலேயில் 60 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை மையத்தை இந்திய ராணுவம் அமைத்துள்ளது. அதைப்போல, சீனா 135க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்களையும், $13.8 மில்லியன் மதிப்பிலான உதவி பொருட்களையும் அனுப்பியது, மேலும் மண்டலேயில் 91 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு பெண்ணை மீட்டது.
மியான்மரின் உள்நாட்டு போர் மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பு மீட்பு பணிகளை சிக்கலாக்கியுள்ளது. சாலைகள், பாலங்கள் சேதமடைந்ததால் உதவி பொருட்கள் விநியோகம் தாமதமாகிறது. உள்ளூர் மக்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றி உயிர்களை காப்பாற்ற முயற்சித்து வருகின்றனர்.