ஆந்திர மாநிலம் ஏலூரு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, பெற்றோர் கண்டித்ததால் கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். நள்ளிரவு வரை ஏலூரு பஸ் நிலையத்தில் தனியாக அமர்ந்திருந்த அந்த மாணவியை, அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர் நைசாக அணுகி, நைசாக பேசி நம்ப வைத்துள்ளார்.
பின்னர், “வீட்டுக்கே விடுகிறேன்” என கூறி மாணவியை தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் ஏலூர் பொனாங்கி சாலையில் உள்ள தனது வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்ற டிரைவர், அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவி, கத்தி கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட திருநங்கைகள் சிலர் மாணவியிடம் விவரம் கேட்டறிந்தனர். பின்னர் மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து நடந்த விஷயத்தை அறிந்த மாணவியின் பெற்றோர் ஏலூரு போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர், ஏலூர் பொனாங்கி சாலை பகுதியைச் சேர்ந்த 40 வயதான பிரபாகர்ராஜு என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரபாகர்ராஜுவை கைது செய்தன.