உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி பகுதியை சேர்ந்தவர் முகமது ரிஸ்வான். இவருக்கு ஜனப் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரண்டாவதாக முஸ்கான் (28) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். ரிஸ்வான்-முஸ்கானுக்கும் 3 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி முதல் முஸ்கான் மாயமானதாக அவரது மாமா ஹசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் சந்தேகத்திற்குரிய நபராக ரிஸ்வானை குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடனால் பாதிக்கப்பட்டு இருந்த ரிஸ்வான், முஸ்கானுடன் உறவில் இருந்ததாகவும், இதனால் அவருக்கு மாதம் ரூபாய் 10,000 கொடுத்து வந்ததாகவும் கூறினார். இருப்பினும் குழந்தை வளர்ப்புக்கு மாதம் ரூபாய் 40000 தேவைப்படுவதாக முஸ்கான் அடிக்கடி ரிஸ்வானுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த பிரச்சனை அதிகரித்த நிலையில் ரிஸ்வான், முஸ்கானை கொலை செய்ய திட்டமிட்டதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். மேலும் ரிஸ்வான் மற்றும் அவரது கூட்டாளிகளான ராதேஷ்யாம் மற்றும் ராம்அவதார் ஆகியோர் சேர்ந்து நரவா பகுதியில் உள்ள இடுகாட்டில் முஸ்கானை கழுத்தை நெரித்து கொலை செய்து முஸ்கானின் உடலை புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலையை செய்வதற்காக தனது கூட்டாளிகளுக்கு தலா ரூபாய் 70000 கொடுத்ததாகவும் ரிஸ்வான் கூறியுள்ளார். இதனை அடுத்து ரிஸ்வான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.