மத்தியப்பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண் வீதியில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் களிகா மாதா மந்திர் சாலை பகுதியில் கிருஷ்ணா க்வாலா-நீது தம்பதியினர் வசித்து வருகின்றனர். கிருஷ்ணாவின் மனைவி நீது கர்ப்பிணியாக இருந்தார்.
மார்ச் 23ம் தேதி காலை 9 மணிக்கு நீதுவுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் கிருஷ்ணா அவரை உள்ளூர் சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு செத்னா சரேல் என்ற செவிலியர் பணியில் இருந்து வந்தார். அவர் நீதுவை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் சில நாட்கள் கழித்து தான் குழந்தை பிறக்கும் எனக் கூறி அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் கிருஷ்ணா தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அதன் பிறகு நடு இரவில் நீதுவுக்கு கடும் பிரசவ வலி ஏற்பட்டதால் கிருஷ்ணா தனது மனைவியை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த காயத்ரி படீதோர் என்ற செவிலியர் பரிசோதித்து பார்த்துவிட்டு இன்னும் 15 மணி நேரத்திற்கு பிறகு தான் குழந்தை பிறக்கும் எனக் கூறிவிட்டார். இதனால் அவர் தனது மனைவியுடன் வீட்டிற்கு திரும்பினார்.
அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது நீதுவின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் அருகில் இருந்த தள்ளுவண்டியில் தனது மனைவியை வைத்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்தார். வழியில் செல்லும்போது நீதுவுக்கு குழந்தை பிறந்து விட்டது. இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கிருஷ்ணா தனது மனைவியையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். இதனால் கிருஷ்ணாவும் அவரது மனைவியும் மிகவும் வருத்தத்துக்கு ஆளாகினனர். இச்சம்பவத்தில் அலட்சியமாக மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.