மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில், பொதுமக்கள் நடுவே 35 வயதான ஒருவரை வெட்டி கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் வியாழக்கிழமை (ஏப்ரல் 4) இரவு இடம்பெற்றுள்ளது.
நாக்பூரில் உள்ள ஜிங்காபாய் டாக்லி மார்க்கெட் பகுதியில் சுமார் இரவு 10.15 மணியளவில் சோஹெய்ல் கான என்பவரை 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் 2 பேர், சோஹெய்ல் கானை சாலையில் கீழே கிடத்தி, தொடர்ந்து கத்தியால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அந்த நேரத்தில் அருகில் இருந்த ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்ததுடன், பின்னணியில் ஒரு பெண் “போலீசாரை அழைக்கவும்” என அலரும் சத்தமும் இடம் பெற்றுள்ளது. மேலும் குற்றவாளிகளிடம் துப்பாக்கி இருப்பதாக அந்த வீடியோ பதிவு செய்தவர் கூறியுள்ளார்.
பின்னர் சில பொதுமக்கள் குற்றவாளிகளை பிடித்து தாக்கும் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், இந்த சம்பவத்திற்கு பின், குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மூன்று பேர் கைது செய்யப்பட்டு, மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.