வீட்டில் 50 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்த வியாபாரி கைது!
Dinamaalai April 06, 2025 09:48 PM

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 50 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வியாபாரியை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (65). வியாபாரியான இவர் தனது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மாரிமுத்துவின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் 2 சாக்கு மூட்டைகளில் 220 பெரிய பாக்கெட்டுகளில் சுமார் 50 புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மாரிமுத்துவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் புகையிலைப் பொருட்களை வீட்டில் மறைத்து வைத்து, கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.