மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் மன்காப்பூர் சதுக்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. அங்கு ஏப்ரல் 4ஆம் தேதி அப்பகுதியில் உள்ள சிலர் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்த ஏடிஎம் எந்திரத்தை காணவில்லை.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய முயன்றனர்.
ஆனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்து வந்த 3 கொள்ளையர்கள் கருப்பு பெயிண்ட் அடித்துள்ளனர்.
மேலும் நெட்வொர்க் கேபிளை துண்டித்து ஏடிஎம் மிஷினை அவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்களை பயன்படுத்தி அகற்றி திருடிச் சென்றுள்ளனர்.
அந்த ஏடிஎம் எந்திரத்தில் ரூபாய் 7.5 லட்சம் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பணத்துடன் ஏடிஎம் எந்திரத்தையும் திருடி சென்ற 3 கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.