குஜராத் மாநிலம் சூரத்தில், 19 வயது கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக திகம்பர சமண துறவி சாந்தி சாகருக்கு 10 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து சூரத் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தையும் சமண சமுதாயத்தையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. வதோதராவிலிருந்து சூரத்துக்கு பிரசங்கம் கேட்க வந்த ஒரு குடும்பம், தங்குமிடத்தில் தங்கியபோது சாந்தி சாகர் அந்த குடும்பத்தின் 19 வயது பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
“உன் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்கிறாயா? எனது கட்டளையை மீறினால் அவர்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது” என மிரட்டியதாகவும், பலமுறை அந்த மாணவியை தவறான முறையில் பயன்படுத்தியதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையின் போது 51 சாட்சிகள், 62 ஆவணங்கள், மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் சிசிடிவி ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மற்றும் சாந்தி சாகரின் மொபைலில் கண்டெடுக்கப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட சாந்தி சாகர் ஏற்கனவே சிறையில் இருப்பதால், மீதமுள்ள தண்டனை ஆண்டுகள் இரண்டு வருடங்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.