கடந்த 2023-ஆம் ஆண்டு பிரிந்த அதிமுக- பாஜக கூட்டணி தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.
அதிமுகவும் பாஜகவும் இணைந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிவித்தார்.
தமிழக அரசியல் வட்டாரங்களில் இந்த கூட்டணி அறிவிப்பு குறித்து என்ன பேசப்படுகிறது?
'தமிழ்நாட்டை அடமானம் வைக்கப்போகிறார்கள்' - ஸ்டாலின்தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இரண்டு ரெய்டுகளுக்கே அதிமுகவை அடமானம் வைத்துள்ளவர்கள் என்று அதிமுகவை விமர்சனம் செய்துள்ளார்.
"நேற்று கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா?குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - #FairDelimitation உள்ளிட்டவை இடம்பெறுமா?," என்று எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிட்ட ஸ்டாலின், "அ.தி.மு.க. தலைமையையும் அவர் (அமித் ஷா) பேச அனுமதிக்கவில்லை. மாறாக தி.மு.க.,வையும், அரசையும், என்னையும் விமர்சிப்பதற்கு மட்டுமே அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி இருக்கிறார்
நீட் தேர்வைப் பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு சரியான பதிலை உள்துறை அமைச்சரால் சொல்ல முடியவில்லை. 'நீட் தேர்வு சரியானது' என்றாவது தனது வாதத்தை அவர் வைத்திருக்க வேண்டும். மாறாக, 'நீட் தேர்வு எதிர்ப்பு என்பதே திசை திருப்புவது' என்ற திசை திருப்பும் பதிலையே உள்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் ஓர் அமைச்சர், 'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு' என்று வாய்க்கு வந்தபடி பேசி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடுதான் என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் ''அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று அறிவித்த மேடையில் ஊழலைப் பற்றி உள்துறை அமைச்சர் பேசிய காட்சியைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கவே செய்வார்கள். ஊழலுக்காக இரண்டு முறை முதலமைச்சர் பதவியை விட்டு விலக வைக்கப்பட்டவர் ஜெயலலிதா. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது பேசத் தகுதியான வார்த்தையா ஊழல் என்பது?
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்ததே 'ஊழல்' தான் என்பதை அனைத்தும் அறிந்த தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலினுக்கு பழனிசாமி பதில்திமுகவின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, "ஸ்டாலினுக்கு, அதிமுக-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
''திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தேன். தமிழ்நாட்டு நலனுக்கான 'குறைந்தபட்ச செயல் திட்டம்' இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெரிவித்திருந்தார். 'என்னவா இருக்கும்?' என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.'' என தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி
''மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்!
காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம். தமிழ்நாடு விரோத தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு எங்களின் கட்சி தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்," என்று பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த கூட்டணி "அப்பட்டமான, சந்தர்ப்பவாத கூட்டணி," என்று விமர்சனம் செய்துள்ளார்.
பா.ஜ.க.வின் செயல் திட்டங்களில் பலவற்றை அதிமுக ஏற்கப் போகிறதா ? இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், "நீட் தேர்வு திணிப்பு, மும்மொழி திட்டம் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, இந்தியை திணிக்கும் வகையில் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை திறப்பது, மக்களவை தொகுதி சீரமைப்பு, நிதிப் பகிர்வில் தமிழகம் புறக்கணிப்பு, மும்மொழித் திட்டத்தை ஏற்காததால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூபாய் 2132 கோடி வழங்காமை.
ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே கலாசாரம், சிறுபான்மையின மக்களின் சொத்துகளை பறிக்கும் வக்பு சட்டத் திருத்தம், மீனவர் பிரச்னை என தமிழ்நாடு சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு விளக்கத்தை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ''அ.தி.மு.க.வை அமித்ஷா கபளீகரம் செய்கிற முயற்சிக்கு எடப்பாடி பலியாகி இருக்கிறார்," என்றும் குறிப்பிட்டார் செல்வப்பெருந்தகை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "இறுதியில் எடப்பாடி வீழந்தார். வென்றவர் நீண்ட நேரம் பேசினார். வீழ்ந்தவருக்கு பேச்சுரிமை இல்லை. எனவே அமைதியாக இருந்தார். தமிழ்நாடு வீழாது. அதுவும் இவர்களிடம் வீழவே வீழாது. அனைவரின் பேச்சுரிமைக்காகவும், நம் மாநிலத்தின் உரிமைக்காகவும், இந்திய மாநிலங்களின் உரிமைக்காகவும் தமிழ்நாடு போராடும்," என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'த.வெ.க.வுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி'அதிமுக -பாஜக கூட்டணி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள த.வெ.க தலைவர் விஜய், "திமுகவை மறைமுகக் கூட்டணியாக பாஜக ஏற்கனவே தயார் செய்துவிட்ட நிலையில் பழைய பங்காளியான அதிமுகவை பாஜக மீண்டும் கைப்பிடித்தது ஆச்சரியமில்லை. தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட நிர்பந்த கூட்டணியே இப்போது ஏற்பட்டுள்ளது. 2026 தேர்தலில் த.வெ.க.வுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி." என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து கூறாத கட்சிகள்தற்போது அதிமுக -பாஜக இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி குறித்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவோ தமிழ் மாநில காங்கிரஸோ, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகவோ கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை.
கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட அமமுக தலைவர் டிடிவி தினகரன், ''தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தொடர்கிறது. திமுகவை வீழ்த்த பிரதமர் மோதியின் அணியில் இருக்கிறோம். ஒருங்கிணைந்த அதிமுக என்பதற்கு வாய்ப்பில்லை. ஒரணியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் திரள வேண்டும் என நான் கூறிவந்தேன்." என தெரிவித்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு