கோவையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே கனமழை பதிவாகியுள்ளது. இது வெப்பச்சலன மழை என்றும், வரும் நாட்களில் இது இன்னும் அதிகமாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வெப்பச்சலனம் மட்டுமின்றி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையும் கூட தற்போதைய மழைக்கு காரணம் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கோவையில் கடந்த ஆண்டு கோடையில் அதீத வெப்பம் நிலவிய நிலையில், இந்தாண்டு அதிக மழை பெய்துள்ளது. இந்த அதீத வெப்பத்திற்கும் அதிக மழைக்கும் என்ன காரணம்? காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கோவை எதிர்கொண்டுள்ளதா?
2024 ஏப்ரலில் வரலாறு காணாத வெப்பநிலை; 2025 ஏப்ரலில் மழை!கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முந்தைய 41 ஆண்டுகளில் இல்லாத அளவில் 38 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கோவையில் வெப்பம் பதிவானது. அதையடுத்து மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டியது. கோவையில் அதுவரை பதிவான வெப்பநிலையில் அதுவே அதிக அளவு என்று வேளாண் பல்கலைக் கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் கூறியது.
ஆனால் தமிழகத்தில் அதே ஆண்டில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விட 33 சதவீதம் அதிகமாக பதிவாகியிருந்தது. இந்த சராசரி கோவையில் இன்னும் அதிகமாக இருந்தது. அந்தளவுக்கு கோவை, நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாகியிருந்தது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி இறுதியிலும், பிப்ரவரி மாதத்திலும் பகலில் அதிக வெயிலும், இரவில் அதிகமான குளிரும் உணரப்பட்டது. கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் ஆய்வகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 30.2 டிகிரி செல்சியஸ் அளவிலும், பிப்ரவரி மாதத்தில் 32.4 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதுவரை பிப்ரவரி மாதங்களில் பதிவானதில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என்று வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, இந்த ஆண்டில் கோடையில் மேலும் வெப்பம் அதிகரிக்குமென்று மக்கள் மத்தியில் ஒரு வித அச்சவுணர்வு எழுந்திருந்தது. அதற்கு மாறாக, கடந்த மார்ச் மாதத்திலிருந்தே இதமான காலநிலையும் இடையிடையே மழையும் பெய்து வருகிறது.
ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு, கொங்கு மண்டலத்தில் ஆங்காங்கே வெப்பச்சலன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கோயம்புத்துார் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறிய சந்தோஷ் கிருஷ்ணன், இந்த வெப்பச்சலன மழை மதியத்திலிருந்து இரவு வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பெய்யும் என்றும் கணித்திருந்தார்.
வெப்பச்சலன மழை என்றால் என்ன?இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோயம்புத்துார் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன், ''வெயில் அடித்து காற்றில் ஈரப்பதம் மேலேழும்புவதே வெப்பச்சலனம் எனப்படுகிறது. பகலில் வெயில் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில், இரவில் மழை பெய்வதை வைத்தே அதை வெப்பச்சலன மழை என்று அறியலாம். கொங்கு மண்டலத்தில் சில நாட்களுக்கு மதியம் வரை நல்ல வெயில் இருக்கும். மாலை மற்றும் இரவில் மழை பெய்யும். இது இயற்கையான அறிவியல் நடைமுறைதான்.'' என்றார்.
வெப்பச்சலன மழை பற்றி எளிமையாக விளக்கிய புதுக்கோட்டை அன்னை தெரசா வேளாண் கல்லுாரியின் முதல்வரும், காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளருமான பாலசுப்பிரமணியம், கிராமங்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதைப் பார்க்கும்போது, மாலையில் இன்று மழை பெய்யும் என்று கணிப்பது இந்த வெப்பச்சலன மழையைத்தான் என்று தெரிவித்தார். பருவமழை, வெப்பச்சலன மழை இரண்டிலும் மழை பெய்வதற்கான இயற்கையின் நகர்வுகள் ஒன்றுதான் என்றும் அவர் விளக்கினார்.
''பருவமழை தவிர்த்து, வெப்பக்காற்று மேலேழும்போது, மேகத்திலுள்ள நீர்த்துளிகள், ஆங்காங்கே மழையாகப் பெய்வதே வெப்பச்சலன மழை. இதை மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி என்றும் சொல்வார்கள். இந்த மழை பரவலாகப் பெய்யாது. தொடர்ந்தும் பெய்யாது. 10 நிமிடங்கள் பெய்யும், பின்பு நின்று விடும். பருவமழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும். இது சற்று மாறுபடும் '' என்றார் பாலசுப்ரமணியம். அதீத வெப்பத்துக்கும், அதீத மழைக்கும் காரணம் காலநிலை மாற்றம்தான் என்கிறார் அவர்.
இந்த வெப்பச்சலன மழை, கொங்கு மண்டலம் மட்டுமின்றி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களிலும் சென்னை உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களிலும் வெயில் மேலும் அதிகரிக்குமென்றும் கூறினார்.
''கொங்கு மண்டலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. அந்த பகுதியில் வழக்கத்தை விட, இந்த முறை கோடையில் பெய்யும் வெப்பச்சலன மழை அதிகமாகவுள்ளது. வழக்கமாக கோவைக்கு அதிகபட்சமாக 18–20 செ.மீ. (200 மில்லி மீட்டர்) கோடை மழை கிடைக்கும். ஆனால் ஏப்ரல் முதல் வாரத்திற்குள்ளாகவே 14 செ.மீ. கோடை மழை பதிவாகிவிட்டது. இன்னும் ஒன்றரை மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும்.'' என்கிறார் சந்தோஷ் கிருஷ்ணன்.
ஆனால் இது வழக்கமான இயற்கையான நடைமுறைதான், அதிகமென்று சொல்ல முடியாது என்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளருமான முனைவர் கீதாலட்சுமி. கோடை காலங்களில் வழக்கமாக நடக்கும் மேலடுக்கு சுழற்சியின் ஒரு பகுதிதான் தற்போது பெய்யும் மழைக்குக் காரணம் என்கிறார் அவர்.
இந்த வெப்பச்சலன மழை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பெய்வதற்கும், கடந்த ஆண்டில் அதீத வெப்பம் இருந்தபோது, இந்த மழை பெய்யாததற்குமான காரணம் குறித்து கீதா லட்சுமி கூறுகையில், ''கடந்த ஆண்டில் அதீத வெப்பத்துக்கு இயற்கையான சில மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். வெப்பச்சலன மழையைப் பொருத்தவரை, இந்தப் பகுதியில்தான் பெய்யும் என்பதைக் கணிக்க முடியாது.'' என்றார்.
இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''பொதுவாக நீர்நிலைகள், கடல் உள்ள பகுதிகளில்தான் காற்றில் ஈரப்பதம் அதிகமிருக்கும். அதற்காக அதே பகுதியில் மழை பெய்யுமென்று கூற முடியாது. காற்று எந்த திசையில் அடிக்கிறது, அதன் வேகம் எவ்வளவு உள்ளது என்பதைப் பொறுத்தே மழை பெய்யும் இடத்தை இயற்கை தீர்மானிக்கிறது.'' என்றார்.
பிபிசி தமிழிடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான சத்தியமூர்த்தி, ''இந்த ஆண்டில் கொங்கு மண்டலத்தின் வெப்பத்தின் அளவு குறைந்துள்ளது; அதற்கு மழை ஒரு காரணமாகவுள்ளது. ஆனால் இந்த மழை, வழக்கத்துக்கு மாறான நடைமுறையாகத் தெரிகிறது. மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்தது வெப்பச்சலன மழையாக இருக்கலாம். ஆனால் கோவையில் ஒரே நாளில் 70 மி.மீ. மழை பெய்ததற்கு, வழக்கத்துக்கு மாறாக கோடையில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்தான் காரணம்.'' என்றார்.
''கடந்த சில ஆண்டுகளாக கோவைக்கு 150 மில்லி மீட்டர் (15 செ.மீ.) வரை கோடை மழை பெய்கிறது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் இந்த அளவு பெய்ய வேண்டிய மழை, இப்போதே 102 மி.மீ. அளவுக்குப் பதிவாகி விட்டது. இன்னும் ஒன்றரை மாதத்துக்கு மேலே இருப்பதால் இந்த ஆண்டில் கோடை மழையின் அளவு மேலும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கலாம்.'' என்றும் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பத்தின் அளவு குறைவாக இருப்பது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய சத்தியமூர்த்தி, இந்த ஆண்டில் மார்ச் மாதத்தில் 28 மில்லி மீட்டரும், ஏப்ரலில் 10 நாட்களுக்குள் 74 மில்லி மீட்டரும் மழை பெய்ததே வெப்பத்தின் தாக்கம் குறைந்ததற்குக் காரணம் என்கிறார்.
''ஆனால் மே மாதத்தில் வெப்பத்தின் அளவு எப்படியிருக்குமென்பதை இப்போதுள்ள இயற்கைச் சூழ்நிலையை வைத்துக் கணிக்க முடியாது. மழை தொடர்ந்தால் வெப்பம் குறையும். மழை குறைந்து விட்டால் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதேபோன்று தமிழகத்துக்கான தென்மேற்குப் பருவமழையையும் மே இரண்டாம் வாரத்தில்தான் கணிக்க முடியும்.'' என்கிறார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு