இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் இந்திய ரயில்வே அனைத்து வகையான முன்பதிவு வகுப்புகளிலும் தட்கல் திட்டம் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மிகக் குறுகிய காலத்தில் பயணங்களை முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை பயணம் செய்ய வேண்டுமென்றால், ஒரு நாளைக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும் . இதேபோன்று தான் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வதற்கும் டிக்கெட் பதிவு செய்ய வேண்டும்.
அதன்படி ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்வதற்கு காலை 11 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். ஏசி பெட்டியில் பயணம் செய்வதற்கு காலை 10 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். இதில் பிரீமியம் தட்கல் என்ற வசதியும் உள்ளது. இதில் தேவைக்கேற்ப டிக்கெட்டின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கும், பிரீமியர் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கும் பதிவு செய்யும் நேரம் ஒரே நேரம் தான்.
இந்நிலையில் இந்த டிக்கெட் முன்பதிவு நேரம் தற்போது சாதாரண மற்றும் பிரீமியர் முன்பதிவு இரண்டிற்கும் வெவ்வேறு நேரமாக மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. ஆனால் இந்த செய்தியை மறுத்த ஐஆர்சிடிசி முன்பதிவு நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று பதிலளித்துள்ளது.