தமிழக அரசு ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தது. தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போடுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநரின் செயல்பாடுகள் சட்டவிரோதம் எனவும் அவருக்கு தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் கூறிருப்பதோடு ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதாக்கள் செல்லாது எனக் கூறியது. தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று அந்த 10 மசோதாக்களும் சட்டமாக அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு குறித்த முழு தகவல்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அதில் ஒரு தீர்ப்பில் ஆளுநர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் அவமரியாதை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதேபோன்று 415-வது பக்க தீர்ப்பில் ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன் பிறகு முடிவு எடுக்க முடியாவிட்டால் அதற்கான காரணங்களை அந்தந்த மாநில அரசுகளுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம். ஒரு வேளை மூன்று மாதங்களுக்குள் குடியரசு தலைவர் முடிவு எடுக்கவில்லை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் நீதிமன்றத்தை நாடலாம். நியாயமான காலத்திற்குள் முடிவு எடுக்கப்படாவிட்டால் கண்டிப்பாக நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.