பழங்குடி மக்களிடம் பேசாமலும், அவர்களை நேரில் பார்க்காமலும் அவர்களை பற்றி அறிந்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள்.
ஏனெனில், அமேசானில் இருக்கும் அந்த பழங்குடியின மக்களைத் தொடர்புகொள்வது சாத்தியமல்ல.
பிரேசிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ரொண்டோனியா மாகாணத்தில் பொலிவியா எல்லைக்கு அருகே வாழும் ஒரு பழங்குடி குழுவின் படத்தைப் பெறுவதற்காக, தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை நிபுணர்கள் பயன்படுத்தினர்.
அந்த பழங்குடி இன மக்கள் மாசகோ என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஆனால், ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்கள் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரியாது.
மாசகோ என்ற பெயர் அவர்களின் நிலத்தில் பாயும் ஆற்றின் பெயரிலிருந்து வந்தது.
"மாசகோ பழங்குடி பிரதேசம், தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே பிரிக்கப்பட்ட முதல் பழங்குடி பிரதேசமாகும்," என்று தேசிய பழங்குடி மக்கள் அறக்கட்டளையின் (ஃபுனாய்) பிரதேச பாதுகாப்பு இயக்குநர் ஜானெட் கார்வால்ஹோ பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
இந்த பிரேசிலிய அரசாங்க அமைப்பு பல ஆண்டுகளாக இந்த நிலங்களைப் பாதுகாக்கவும், அங்கு வாழும் மக்கள் தொடர்பு கொள்ளப்படுவதைத் தடுக்கவும் பணியாற்றி வருகிறது.
அந்தப் பகுதியில் ஃபுனாய் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அல்டெய்ர் அல்கேயர், 30 ஆண்டுகளாக அந்த பணிக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார்.
வெளியுலகத் தொடர்பில்லாமல் அமேசான் காடுகளில் வாழும் அந்த பழங்குடி சமூகத்தின் முதல் தோற்றத்தை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்தினாலும், "அவர்கள் யார் என்பதை இன்னும் எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. இன்னும் நிறைய மர்மங்கள் உள்ளன," என்று என்று அல்கேயர், தி கார்டியன் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 2024 இல் எடுக்கப்பட்ட அந்தப் படங்களையும், மாசகோ எனும் அந்த பழங்குடி இனம் தங்களது தற்காலிக குடியிருப்புகளை முற்றிலுமாக கைவிட்ட போது எடுக்கப்பட்ட பிற படங்களையும் ஃபுனாய் அமைப்பு பிபிசி முண்டோவுடன் பகிர்ந்து கொண்டது.
இந்தப் புகைப்படங்களைப் பெறவும், இந்தச் சமூகத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் செயற்கைக்கோள் படங்களையும் நிபுணர்கள் நம்பியுள்ளனர்.
Evergreen: Saving Big Forests to Save the Planet என்ற புத்தகத்தின் இணை ஆசிரியரான ஜான் ரீட் மற்றும் பிரேசிலிய செய்தித்தாள் ஓ குளோபோவின் ஆசிரியரான டேனியல் பயாசெட்டோ ஆகியோர் இணைந்து தி கார்டியனில் வெளியான கட்டுரையை எழுதியுள்ளனர்.
ஆய்வின் மூலம் கிடைத்துள்ள புதிய படங்கள் வெளியுலகத் தொடர்பில்லாத பிரேசில் பகுதி பழங்குடியின மக்கள், நன்றாக வாழ்ந்து வருவதை வெளிக்காட்டுகின்றன.
ஆனால், அதே சமயம் அதில் சில சவால்களும் உள்ளன.
முன்னதாக, "அமைதியான முறையில் அந்த பழங்குடி மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியது" என்பதை 1987 ஆம் ஆண்டு ஃபுனாய் நிபுணர்கள் கண்டறிந்தனர்.
பிரேசிலில் தனிமைப்படுத்தப்பட்ட 28 பழங்குடி மக்களில் மாசகோ இன மக்கள் குழுவும் உள்ளனர்.
"இந்த கிராமத்தின் சரியான மக்கள் தொகை குறித்த தரவு எங்களிடம் இல்லை, ஆனால் அவர்கள் விட்டுச் செல்லும் தடயங்கள், குடியிருப்புகளின் அளவு மற்றும் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அப்பகுதியின் மக்கள் தொகை 220 முதல் 270 வரை இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்."
1990களின் முற்பகுதியில், அல்கேயர் 100 முதல் 200 பேர் வரை இருந்ததாக மதிப்பிட்டார்.
கார்வால்ஹோவின் கூற்றுப்படி, அந்த பழங்குடி மக்கள் மாசகோ பூர்வீக நிலத்தின் முழு நிலப்பரப்பிலும் காணப்படுகின்றனர்.
இது தோராயமாக 421,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது.
"அவர்கள் தாங்கள் வாழும் இடத்தை, மாசகோ பூர்வீக நிலத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ரியோ பிராங்கோ பூர்வீக நிலத்தின் ஒரு பகுதி (சுமார் நான்கில் ஒரு பகுதி) வரை விரிவுபடுத்துகிறார்கள்."
அந்த மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது ஃபுனாயின் கொள்கை அல்ல என்பதால், அவர்கள் நடமாடும் முக்கிய இடங்களில் தானியங்கி கேமராக்களை அமைக்க முடிவு செய்தனர்.
எனவே, 2019 ஆம் ஆண்டில், அவர்கள் ஒரு கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்ட பின்னர், தங்களிடம் இல்லாத ஒன்றைப் பெறும் நோக்கத்துடன், அதாவது அந்த பகுதியின் புகைப்படத்தைப் பதிவு செய்ய, ஒரு கேமராவை "அப்பகுதியின் மையத்தை நோக்கி" வைத்தனர். இறுதியில், அவர்களது முயற்சி வெற்றியடைந்தது.
ஆனால், அப்பகுதியை புகைப்படம் எடுப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள் அல்ல.
அந்தப் பகுதியில் அவர்கள் கடந்து சென்ற பிறகு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்பினர்.
2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள், 2021 ஜனவரியில் அந்த பகுதியில் நிறுவப்பட்டிருந்த கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டவை என்று கார்வால்ஹோ கூறுகிறார்.
2021ஆம் ஆண்டு புனாய் குழு ஒரு பாதையில் விட்டுச் சென்ற கோடரிகள் மற்றும் கத்திகளை, அந்தப் பழங்குடியின மக்கள் எடுத்து சென்றனர்.
இந்த கேமரா ஒன்பது பழங்குடி மக்களைக் கொண்ட ஒரு குழுவை பதிவு செய்தது. அவர்கள் அனைவரும், சுமார் 20 முதல் 40 வயதுகளில் உள்ள ஆண்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.
"வானிலை சாதகமாக இல்லாததால், அந்த கேமராவால் தெளிவான படங்களை எடுக்க முடியவில்லை என்றாலும், அந்த பழங்குடி மக்களின் உடலமைப்பு, நடத்தை மற்றும் பிற அம்சங்களைப் பதிவு செய்வதற்கான முக்கிய ஆவணமாக இந்தப் படம் இருந்தது."
அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பழங்குடி மக்கள், கூர்மையான முனையுடன் கூடிய மரத் துண்டுகள் போன்ற சில "கூர்மையான பொருட்களை" விட்டுச் சென்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஒரு வகை கால்ட்ராப் (கூர்மையான முனைகளைக் கொண்ட கருவி) என்று அடையாளம் கண்டுள்ளனர்.
அவை தரையில் ஊன்றப்பட்டிருக்கும். அவற்றின் கூரிய நுனிகள் வெளிப்புறமாக இருக்கும்.
மானுடவியலாளர்கள் கூறியபடி, அவர்கள் அந்த கூர்மையான மரத்துண்டுகளை பாதைகள், மரக்கட்டை, வேர்களின் பின்புறம் அல்லது பள்ளத்தாக்கு போன்ற முக்கியமான இடங்களில் வைத்துள்ளார்கள் .
"இத்தகைய இடங்களில் நமது உடலின் எடை பாதத்தில் அழுத்தும். அவை சில சமயங்களில் இலைகள் அல்லது புல்லால் மறைக்கப்பட்டிருக்கும்," என்று நிபுணர் கூறுகிறார்.
"காலணிகள் அணிந்திருந்தாலும் கூட, அந்த கூர்மையான பொருட்கள் காலில் துளையிடுவதால் காயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அது தீவிரமான காயத்தை ஏற்படுத்தக் கூடும்."
1980கள் மற்றும் 1990களில், இந்தப் பாதுகாப்பு மண்டலத்துக்குள் மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் இருந்தது என்று நிபுணர் விளக்குகிறார்.
"ஃபுனாய், பிரேசிலிய சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்கள் நிறுவனம், கூட்டாட்சி காவல்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான லாரிகள் மற்றும் மரம் வெட்டும் டிராக்டர்கள் போன்ற பல வாகனங்களின் டயர்களை, பழங்குடி மக்களின் கருவிகள் துளைத்து பாதிப்பை ஏற்படுத்தின."
2024 ஆம் ஆண்டில், கேமராக்களை அமைத்த பிறகு, ஃபுனாய் குழு உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து விலகி, காப்பகத்துக்குள் நுழைந்தது.
அந்தப் பகுதிக்குள் பூர்வீகக் குடியேற்றம் "திட்டமிடப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையாக இருந்தது" என்று அல்கேயர் நம்புகிறார்.
வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிப்பில் ஈடுபடும் மக்களுக்கேற்ப வீடுகள் அமைந்துள்ளன என்று கார்வால்ஹோ சுட்டிக்காட்டுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "அந்த குழுவைச் சேர்ந்த பெரும்பாலான மக்களின் நடமாட்டம், பருவநிலை மாற்றங்களான வறட்சி மற்றும் மழை ஆகியவற்றுடனும், தாவரங்களின் வேறுபாடுகளுடனும், வயல்வெளிகள், சவன்னா புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடுகளுக்கும் இடையே தொடர்புடையவை," என்று அவர் கூறினார்.
"அந்த வகையில், அவர்கள் இயற்கை வளங்களை நிர்வகிக்கும் முறையை உருவாக்குகிறார்கள். நாடோடி வாழ்க்கை முறைக்குள் தங்கள் குடியிருப்பு எல்லையை வரையறுக்கிறார்கள்."
பழங்குடி மக்களால் கைவிடப்பட்ட வீடுகளில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சில அம்புகளின் நீளம் 3 மீட்டருக்கும் அதிகமாக இருந்தது. அவர்களை ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று அதில் இருந்தது.
"அம்பும் வில்லும் பெரிதாக இருப்பது புதிரான ஒன்று அல்ல. பொலிவியாவின் சிரியோனோ போன்ற மற்ற சமூகங்களும் இதேபோன்ற வில்-அம்புகளை பயன்படுத்துகிறார்கள்".
ஆனால், "அவர்கள் எப்படி நீண்ட வில் மற்றும் அம்புகளை காடு மற்றும் சவன்னாக்களின் நடுவில் கையாள்கிறார்கள்? என்பது "ஒருபோதும் மறக்க முடியாத கேள்வி" என்று மானுடவியலாளர் விளக்குகிறார்.
"அவர்கள் குரங்குகள், பன்றி போன்ற விலங்குகள், மான்கள் உள்ளிட்ட பல விலங்குகளைக் கொல்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவற்றைப் பிற வழிகளில் கொல்வது எளிதல்ல," என்று அவர் கூறினார்.
தி கார்டியனில் வெளியான கட்டுரையில், அம்பை எவ்வாறு எய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு 'தெரியாது' என்று அல்கேயர் குறிப்பிட்டார்.
"மற்ற பழங்குடி மக்களும் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்கள் சிரித்து, இது சாத்தியமில்லை என்று கூறுகிறார்கள். ஒருவேளை படுத்துக்கொண்டே அதனைப் பயன்படுத்தலாம் என கருதுகிறார்கள். ஆனால், இன்று வரை இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புதிருக்கு அவர்கள் விடை கண்டுபிடிக்கவில்லை " என்று அவர் தெரிவித்தார்.
பழங்குடிகளை தொடர்பு கொள்ளாமல் பாதுகாப்பதில் உள்ள சவால்கள்"தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக பிரத்யேகமாக வரையறுக்கப்பட்ட முதல் பூர்வீக பிரதேசம் மாசகோ பூர்வீக பிரதேசமாகும்" என்று கார்வால்ஹோ குறிப்பிடுகிறார்.
"ஆனால் அதேநேரத்தில், மற்ற பழங்குடி மக்களும் அந்த பாதுகாப்பைப் பெற்றனர், பின்னர் அவர்களுக்காகப் பிரதேசங்கள் வரையறுக்கப்பட்டன."
"ஆனால் அந்த மக்களுடன் பேச முடியாத சூழலில், அவர்களின் முழு வரலாற்று பின்னணியையும், அவர்கள் வாழ்விடத்தில் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வது தான், இந்த மக்களுக்கான பிரதேசத்தை வரையறுப்பதில் உள்ள சவால்"
சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மற்றவர்களிடம் இருந்து, தடயங்களையும் தகவல்களையும் சேகரிக்க பல முறை காட்டுக்குள் ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன, இதன்மூலம் அந்தப் பிரதேசம் வரையறுக்கப்படுகிறது."
"தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் சுயாட்சியை, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டிய அவசியமின்றி, அவர்களின் வாழ்க்கை முறைகளில் எந்தவித தலையீடும் இல்லாமல் உறுதி செய்வது அவசியம்" என்று புனாய் தெரிவிக்கிறது.
நிபுணரின் கூற்றுப்படி, மாசகோ சமூகம் அமைந்துள்ள பிரதேசத்தில், "மரம் வெட்டுதல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் போன்ற எந்த மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்களும்" தற்போது இல்லை என அறியப்படுகின்றது.
"அந்தப் பிரதேசத்தில் நிரந்தரமாக இருக்கும் ஃபுனாய் குழு, எல்லைப் பகுதியில் கூட அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் திறன் கொண்டது."
இந்த அமைப்புக்கு, முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.
இவை, பல்வேறு நோக்கங்களுக்கு இடையில், தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்களின் உடல்நலமும், சமூக வாழ்க்கையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
அதே நேரத்தில், சுற்றுச்சூழலுக்கான கவலைகளும் உள்ளன, ஏனெனில் "இந்த பிரதேசத்தின் இயற்கை வளங்களை முழுமையாக பாதுகாப்பது தான், இந்த மக்களின் உயிர்வாழ்வுக்கு அவசியமானது" என்று ஃபுனாய் வெளியிட்ட அறிக்கையில் அல்கேயர் குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற பழங்குடி சமூக மக்கள் வேட்டையாடவும், அவர்கள் உணவு சேகரிப்பதையும் எளிதாக்குவது தான், கத்திகள் மற்றும் கோடரிகள் போன்ற உலோக கருவிகளை விட்டுச்செல்வதன் நோக்கமாக உள்ளது.
இதன் மூலம், அவர்கள் அதேபோன்ற பொருட்களைக் கண்டுபிடிக்க தங்கள் நிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த முறையால் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டதா என்று நான் கார்வால்ஹோவிடம் கேட்டேன்.
"இந்த கருவிகளை மக்கள் எளிதாகப் பெற இது ஒரு வகையில் உதவியது. இது எல்லோருக்கும் பயனளிக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், இந்த சமூக மக்கள் தங்களது நில எல்லைக்குச் செல்வதையோ அல்லது கடப்பதையோ இது தடுக்கவில்லை என்பதை நாங்கள் உறுதியாக சொல்கிறோம். அதற்குப் பிற காரணங்கள் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு."
ரீட் மற்றும் பியாசெட்டோ விளக்குகையில், "ஒரு காலத்தில் மக்கள் தொடர்புகொள்வதற்காக இவை பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது அவை தொடர்பை தவிர்க்க பயன்படுத்தப்படுகின்றன," என்று கூறுகின்றனர்.
"மற்ற பழங்குடி பிரதேசங்களில் பயன்படுத்தப்படும் இந்த நடைமுறை, பண்ணைகளுக்கோ அல்லது மரம் வெட்டும் முகாம்களுக்கோ மக்கள் கருவிகளை எடுக்கச் செல்வதைத் தடுக்கிறது," என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
பழங்குடி மக்களின் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையைப் பாதிக்காமல் எடுக்கப்பட்ட சமீபத்திய படங்கள் மற்றும் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட தகவல்கள், இந்த பழங்குடி சமூகம் எவ்வாறு வாழ்கிறது மற்றும் வளர்கிறது என்பதை நிபுணர்கள் தொடர்ந்து அறிய உதவுகின்றன.
இந்த சமூகம் வெளியுலகத் தொடர்பு இல்லாமல், தற்போது இருக்கும் நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
"இந்த மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான இந்த பிரதேசத்தின் வளங்களை பாதுகாக்க முடியும் என பிரேசில் அரசாங்கம் உறுதியளிக்கும் வரை, நான் சற்று நம்பிக்கையுடன் உணர்கிறேன்," என்று மானுடவியலாளர் பதிலளிக்கிறார்.
"ஆனால் ஒவ்வொரு தலைமுறையிலும் நடைமுறைகள் மாறுகின்றன, ஒரு கட்டத்தில் இந்த மக்கள் தொடர்பு கொள்ள விரும்பலாம். அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு