சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் பிரபலமாவதற்காக பலரும் தனித்துவமான காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளைஞர், நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்து தேநீர் குடிக்கும் காட்சியை பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வடிவில் வெளியிட்டார். கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி மகடி சாலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த ரீலைக் கண்ட பொதுமக்கள் சிலர், இது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கலாம் என கருத்து தெரிவிக்க, வீடியோ போலீசாரின் கவனத்துக்கும் வந்தது. இதனையடுத்து, பெங்களூரு போக்குவரத்து போலீசார் அந்த நபரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர். “பயப்படுங்கள்! சாலையில் தேநீர் குடிப்பது புகழை அல்ல, அபராதம் தான்!” என எச்சரிக்கையுடன் போலீசார் தங்களது ‘X’ பக்கத்தில் அந்த நபரின் ஸ்டண்ட் மற்றும் கைது செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்தனர்.
பொதுமக்கள் செல்லும் முக்கியமான சாலையில், போக்குவரத்து மற்றும் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த வகை வீடியோக்கள் எடுக்கப்படுவது ஆபத்தானது என்றும், இது போன்ற செயலை போலீசார் கடுமையாகக் கையாளுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீல்ஸ் மூலம் புகழ் தேட முயல்வோருக்கு இது முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.