கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் அமைந்துள்ள “அம்ரபாலி லெஷர் வேலி” என்ற உயர்தர குடியிருப்பு வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை திடீரென ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாகனத்தில் கட்டாயமாக ஒட்ட வேண்டிய பார்க்கிங் ஸ்டிக்கர் இல்லாததால், பாதுகாப்பு ஊழியர்கள் அந்த காரை நிறுத்தினர். இதனால் வாகனத்தில் வந்தவர்கள் அதற்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்திலேயே அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், ஒருவர் பாதுகாப்பு ஊழியரை தள்ளுவது, அதற்கு பதிலளித்து தாக்குவது, பின்னர் கம்புகளால் தாக்கும் காட்சிகள் தெளிவாக தெரிகின்றன. ஒரு பெண் பாதுகாப்பு ஊழியர் மோதலை நிறுத்த முயன்றும், சுமார் 5 நிமிடங்கள் தொடர்ந்து மோதல் நடந்தது. இந்த தாக்குதலில் ஒரு பாதுகாப்பு ஊழியர் தலையில் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு பொறுப்பாளராக உள்ள தேஜ்பால் என்பவர் பிஸ்ரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள், சொகுசு குடியிருப்புகளிலும் எவ்வளவு தீவிரமான தகராறுகள் நடக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுவதாகவும், சமாதானமாக பிரச்சினைகளை தீர்க்கும் கலாசாரம் இழக்கப்பட்டுவிட்டது எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.