போப் ஆண்டவராக இருந்த பிரான்சிஸ், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். அவரது மறைவு உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 நாட்களும் வேளாங்கண்ணி பேராலயத்தில் எவ்விதமான பண்டிகைகளோ, கொண்டாட்டங்களோ நடைபெறாது எனவும், மறை மாவட்ட ஆயரின் உத்தரவுக்கு இணங்க பேராலயத்தில் போப் ஆண்டவருக்காக சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறும் எனவும் பேராலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போப் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு போப் ஆண்டவரின் வயதை குறிக்கும் வகையில் 88 முறை பேராலய மணி ஒலிக்கப்பட்டது. வழக்கமாக பிரார்த்தனை களின் போது போப் ஆண்டவர் மற்றும் மறை மாவட்ட ஆயர் ஆகியோரின் பெயர்கள் உச்சரிக்கப்படுவது வழக்கம். தற்போது போப் ஆண்டவர் மறைந்துவிட்டதால் அடுத்த போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரார்த்தனையின் போது போப் ஆண்டவரின் பெயர் உச்சரிக்கப்பட மாட்டாது என்று பேராலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.