வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்தவர் லோகேஷ் (25). பெங்களூருவில் தனியார் ஐ.டி.நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் லோகேஷ், குடியாத்தத்தைச் சேர்ந்த ஜனனிபிரியா (23) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
கணியம்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இருவரும் ஒன்றாக படித்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ள நிலையில், இவர்களது காதல் விவகாரம் தெரிய வந்து, இவர்களின் காதலுக்கு ஜனனி பிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதல் ஜோடியினர் வீட்டைவிட்டு வெளியேறியதுடன் கடந்த 17ம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அதேநேரம், மகளை காணவில்லை என ஜனனி பிரியாவின் பெற்றோர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் காதல் ஜோடியினர் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்.
இந்த தகவலறிந்த ஜனனி பிரியாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் காவல் கண்காணிப்பளார் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, லோகேஷை திடீரென ஜனனி பிரியாவின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்க தொடங்கினர். உடனிருந்த ஜனனி பிரியாவையும் தாக்கினர். இதனால் அச்சமடைந்த காதல் ஜோடியினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முதல் தளத்துக்கு ஓடினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள், ஜனனி பிரியாவின் குடும்பத்தினரை தடுத்து நிறுத்தினர்.
இந்த தாக்குதலால் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப் பாளர் பாஸ்கரன் ஜனனி பிரியாவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர், சத்துவாச்சாரி காவல் துறையினரை வரவழைத்து விசாரணைக்காக இரு தரப்பினரை யும் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.