குஜராத் அணிக்காக விளையாடி வந்த தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் ககிசோ ரபாடா, நடப்பு தொடரில் இருந்து விலகி, சொந்த நாட்டிற்கு திரும்பினார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட குஜராத் அணியும், காரணம் எதையும் குறிப்பிடாமல், சொந்த காரணங்களுக்காக அவர் சென்றதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்தியதால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தென்னாப்ரிக்க அணி வீரர் ககிசோ ரபாடாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரபாடா வெளியிட்ட அறிக்கையில்;பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி சொந்த காரணங்களுக்காக தென்னாப்ரிக்காவுக்கு திரும்பினேன். பொழுது போக்கிற்காக பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தாகும். உங்களை ஏமாற்றியதற்கு மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாடும் பாக்கியத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.
இந்த தருணம் என்னை மதிப்பிடாது. நான் எப்போதும் செய்ததை தொடர்ந்து செய்வேன். கடினமாக உழைத்து, ஆர்வத்துடனும், பக்தியுடனும் விளையாடுவேன், எனக் கூறினார்.
ரபாடாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அடுத்தமாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் தென்னாப்ரிக்கா அணியில் இடம்பெற மாட்டார். இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.