அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், கிட்டத்தட்ட 63 ஆண்டுகளாக ஆட்ரி பேக்பெர்க் எனும் பெண்ணைக் காணவில்லை. அடையாளங்களை மாற்றி வாழ்ந்த அவரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் குறித்து மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில், பேக்பெர்க் உயிருடன் நலமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
1962 ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று, ரீட்ஸ்பர்க் என்ற சிறிய நகரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஆட்ரி பேக்பெர்க் காணாமல் போனபோது, அவருக்கு 20 வயது.
"பேக்பெர்க் காணாமல் போனது அவருடைய சொந்த விருப்பத்தால் ஏற்பட்ட சம்பவம். அது எந்தவொரு குற்றச் செயலின் விளைவாகவோ, அல்லது சந்தேகத்துக்கிடமான சூழ்நிலைகளின் காரணமாகவோ அல்ல" என்று சவுக் மாவட்ட அதிகாரி சிப் மெய்ஸ்டர் தெரிவித்தார்.
அந்த பெண் விஸ்கான்சின் மாகாணத்துக்கு வெளியே வசித்து வருவதாக கூறிய அவர், அதற்கான எந்தவொரு கூடுதல் தகவல்களையும் பகிரவில்லை.
'விஸ்கான்சின் மிஸ்சிங் பெர்சன்ஸ் அட்வகசி' என்ற தொண்டு நிறுவனத்தின் படி, பேக்பெர்க் காணாமல் போன போது, அவருக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் இருந்தனர்.
தற்போது 82 வயதாக இருக்கும் பேக்பெர்க், தன்னை 15வது வயதில் திருமணம் செய்து கொண்டவர், தன்னை அடித்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டி, காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் மீது குற்றவியல் புகார் அளித்திருந்ததாக அந்த குழு தெரிவித்தது.
பேக்பெர்க் காணாமல் போன அன்று, அவர் வேலை செய்த கம்பளி ஆலையில் இருந்து சம்பளக் காசோலையை பெற வீட்டை விட்டு வெளியேறினார்.
பேக்பெர்க் தம்பதிக்கு 14 வயதுடைய குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் இருந்தார்.
தானும் பேக்பெர்க்கும் விஸ்கான்சின் மாகாணத் தலைநகரான மேடிசனுக்கு வாகனத்தில் பயணம் செய்து, அங்கிருந்து சுமார் 300 மைல்கள் (480 கி.மீ) தொலைவில், இண்டியானாவில் உள்ள இண்டியானாபோலிசுக்கு செல்லும் பேருந்தைப் பிடித்ததாக காவல் துறையினரிடம் அவர் தெரிவித்தார்.
பேக்பெர்க்கின் குழந்தை பராமரிப்பாளர் பதட்டமடைந்து வீடு திரும்ப விரும்பியுள்ளார். ஆனால், பேக்பெர்க் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் வரை உடன் சென்ற பேக்பெர்க் பின்னர் திரும்பி விட்டார்.
புலனாய்வாளர்கள் இந்த வழக்கை தீர்க்க பல தடயங்களைத் தேடியதாக சவுக் மாவட்ட காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் இறுதியில் புதிய தடயங்கள் எதுவும் கிடைக்காததால், இவ்வழக்கு விசாரணை முடங்கியது.
ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பழைய வழக்கு கோப்புகளை மறுபரிசீலனை செய்ததன் மூலம் விசாரணை மீண்டும் தொடங்கியது.
காணாமல் போன பெண்ணான பேக்பெர்க்கைக் கண்டறிவதில் ஒரு முக்கியமான துப்பு அவரது சகோதரிக்கு சொந்தமான இணையதள வம்சாவளி கணக்கிலிருந்து கிடைத்தது என்று இந்த வழக்கைத் தீர்த்த துப்பறியும் அதிகாரியான ஐசக் ஹான்சன், உள்ளூர் செய்தி நிறுவனமான டபிள்யூஐஎஸ்என்-க்கு (WISN) அளித்த பேட்டியில் கூறினார்.
பேக்பெர்க் தற்போது வசிக்கும் ஊரின் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாகவும், அவருடன் 45 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியதாகவும் டெட் ஹான்சன் கூறினார்.
இதுகுறித்து பேசிய டெட் ஹான்சன், "அவர் அந்த வாழ்க்கையிலிருந்து விலகி, பழைய விஷயங்களை மறந்து தன் விருப்பப்படி வாழ்க்கையை நடத்தினார் என்று நான் நினைக்கிறேன். அவர் எந்த வருத்தமும் இல்லாமல், மகிழ்ச்சியாகவும், தன் முடிவில் நம்பிக்கையுடனும் இருந்தார்" என்று தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.