இந்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று முன் தினம் ஞாயிறு அன்று நடைபெற்ற நிலையில், நாடு முழுவதும் சுமார் 22 லட்சத்து 70 ஆயிரம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், நீட் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்த கேள்வி இடம் பெற்றிருந்தது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து கல்வியாளர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
2025-26ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' தேர்வை எழுத நாடு முழுவதும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் என மொத்தம் சுமார் 22 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தேர்வுக்காக 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்கள் இந்தியாவிலும், 13 வெளிநாடுகளில் உள்ள நகரங்களிலும் அமைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சுமார் 1.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 44 தேர்வு மையங்களில் 21 ஆயிரத்து 960 பேர் எழுத விருப்பம் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் ஞாயிறு அன்றுநேற்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தது. தேர்வு மையத்துக்குள் காலை 11.30 மணியில் இருந்து தேர்வர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 1.30 மணி வரை உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர், தேர்வு மையம் மூடப்பட்டு, தேர்வர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்த மாணவ-மாணவிகளிடம் 'நீட்' தேர்வுக்கே உரித்தான கடும் கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. குறிப்பாக மாணவிகள் தலைவிரிக்கோலம் காட்சி இந்த ஆண்டும் வழக்கம் போல அரங்கேறியது. பெரும்பாலான மாணவிகள் சாதாரண உடைகளையே அணிந்து வந்திருந்தனர்.
இந்நிலையில் 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறான வினாவிற்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். இந்த தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வினாத்தாளில் 117-வது கேள்வியாக ஈஸ்ட்டால் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம் எது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் பீர், ரம், பிராந்தி, விஸ்கி ஆகியவை ஆகும். இந்த 4 விடைகளில் சரியானதை தேர்வு செய்து எழுத வேண்டும். இந்த கேள்விக்கு விடை பீர் என்பதாகும். இதை சரியாக எழுதியிருந்தால் 4 மதிப்பெண்கள் கிடைக்கும்.
இந்த கேள்விக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்க எத்தனையோ இருக்கும் நிலையில் மதுபானம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கல்வியாளர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.