தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே வீ்ட்டு கதவை உடைத்து திருட முயன்ற முன்னாள் போலீஸ்காரரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சீர்காட்சி விஜயராஜபுரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (62). தனியாக வசித்து வரும் இவர் நேற்று காலையில் மீன் வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். மீன் வாங்கி விட்டு வந்தபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் பார்த்தபோது, உள்ளே மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார்.
உடனே மூதாட்டி திருடன்...திருடன் என சத்தம் போட்டுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். அவர்கள் வீட்டை சுற்றிவளைத்தனர். அப்போது வீட்டிற்கு பதுங்கி இருந்தவரை அவர்கள் மடக்கி பிடித்தனர். அப்ேபாது, அவர் போலீஸ்காரர் என்றும், ஒரு பெண்ணை தேடி வந்தாகவும் கூறி தப்பிக்க முயன்றுள்ளார். ஏற்கனவே அந்த பகுதி வீடுகளில் அடிக்கடி ஆடு, நகை, கோவில் உண்டியல் திருட்டுகள் நடந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில், மெஞ்ஞானபுரம் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அந்த மர்ம நபரை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்து மகன் கற்குவேல் (33) என்பதும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் என்பதும், மூதாட்டி வீடுபுகுந்து அவர் திருட முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.