தூத்துக்குடி அருகேயுள்ள சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). இவரது மனைவி தமிழ்ச்செல்வி, சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டாராம். இதனால், பிரபாகரன் தனது மனைவி பெயரில் பண்டாரம் பட்டியிலுள்ள 4.5 சென்ட் நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக, தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் செயல்பட்டு வரும் சங்கரப்பேரி கிராம நிா்வாக அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பித்தாா்.
அந்த விண்ணப்பம் இருமுறை நிராகரிக்கப்பட்டதாம். தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி (42), என்பவர் சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவர் பட்டா மாறுதலுக்கு பிரபாகரனிடம் ரூ.3ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து பிரபாகரன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து டிஎஸ்பி பீட்டர் பால் அறிவுறுத்தலின் பேரில் விஏஓ அலுவலகத்தில் வைத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வி.ஓ.ஓ., கணேச மூர்த்தியிடம் பிரபாகரன் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.