நியூயார்க்கின் போஹேமியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததை தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் அங்கு சென்று சோதனை நடத்தின.
அப்போது வீட்டிற்குள், 28 பூனைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பூனைகள் சுகாதாரமற்ற, நெரிசலான சூழ்நிலையில் இருந்தன. வீட்டின் உள்ளே கடும் கழிவுகள், பழைய பெட்டிகளில் சிக்கிய குட்டி பூனைகள், சுவாசமற்ற சூழல் போன்றவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலை காரணமாக, மீட்புப் பணியாளர்களில் ஒருவர் வாந்தியெடுத்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். விலங்குகள் மீட்பு அமைப்பின் தலைவர் ஜான் டெபாக்கர் தெரிவித்ததாவது, “வீடு முழுவதும் பெட்டிகள் சிதறிக் கிடந்தன.
ஒவ்வொன்றிலும் இறந்த அல்லது அசைவற்ற பூனைகள் இருந்தன. இது ஒரு மன அழுத்தத்தைக் கொடுத்த காட்சியாக இருந்தது” என்றார். மேலும், பாதிக்கப்பட்ட பூனைகள் தற்காலிகமாக நகர விலங்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.
75 வயதான வீட்டு உரிமையாளர் ஸ்டீவன் கிளாண்ட்ஸ் கடந்த சில ஆண்டுகளாக தெரு பூனைகளை தன்னார்வமாக வளர்த்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். ஆனால் அவருடைய மனைவி இறந்ததை அடுத்து, மனஅழுத்தத்தில் சிக்கி, தெரு பூனைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது SPCA அமைப்பு, இந்த பூனைகளுக்கான பராமரிப்பு செலவுக்காக $10,000 நன்கொடை கேட்டு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.