கிரேட்டர் நொய்டாவின் கஸ்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாடா கிராமத்தில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் தனது இ-ஆட்டோவின் பின்னால் நாயை கயிற்றால் கட்டி சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பெரும் கண்டனம் எழுந்துள்ளது. அந்த நபர் நிதின் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, நாய் உயிருடன் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஒருவர் வீடியோவை இணையத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிதினை கைது செய்துள்ளனர். விலங்கு வதை தடுப்பு சட்டம் மற்றும் பிற கடுமையான பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோட்வாலி பொறுப்பாளர் தர்மேந்திர சுக்லா இது குறித்து “இந்த கொடூரமான செயலை மனிதாபிமானமற்ற செயல் என கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளி, நாயை ஆட்டோவில் அழைத்துச் சென்றபோது அது விழுந்ததாக கூறினாலும், இது சட்டவிரோதமாகும்” எனக் கூறியுள்ளார். தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.