பெரும் சோகம்... சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு!
Dinamaalai May 13, 2025 03:48 PM


மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மே 13ம் தேதி  அதிகாலை 3 மணி முதலாக கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அனுமதிச்சீட்டு வைத்திருந்த முக்கிய பிரமுகர்களுக்கு  மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  
 
அப்பகுதியில், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (65) என்ற பொறியாளர் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிநாதனை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். அதே நேரத்தில்  அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் வெளியேற முடியாத சூழல் உருவானது.

இதனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் அங்கும் இங்குமாக அலைந்து திரியக்கூடிய நிலை ஏற்பட்டது. பின்னர் வேறு வழியின்றி கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான தண்ணீர் நிரப்பப்பட்ட பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டுச் சென்றது. மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதேபோல் யானைக்கல் கல்பாலம் அருகே கூட்டநெரிசலில் சிக்கிய கண்ணன் (43) என்பவரும் உயிரிழந்தார். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.   அமைச்சர் சேகர் பாபு இது குறித்து  “அளவுக்கடங்காத, கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிரம்பியுள்ளது மதுரை. பால வேலைகள் நடப்பதால் சாலைகள் முறையாக சீரமைக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் உயிரிழந்தவர்கள் குறித்து முறையாக தகவல் கேட்டு அறிந்து வருகிறோம். அப்படி ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கான நிவாரணம் வழங்குவோம்” எனக் கூறியிருந்தார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.