நெல்லையில் பரபரப்பு... திமுக நிர்வாகி வீடு உட்பட 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு!
Dinamaalai May 15, 2025 08:48 PM

 

திமுக நிர்வாகி வீடு உட்பட 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி அருகே உள்ள கீழ முன்னீர் பள்ளத்தை சேர்ந்தவர் செல்வ சங்கர் (45). பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளுக்கு கொடிகள் கட்டும் பணியை மொத்தமாக எடுத்து செய்து வருகிறார். 

இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் செல்வ சங்கர் வீட்டின் முன் பலத்த சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்த போது அங்கு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தெரிய வந்தது. முன்னீர் பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தினார்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, 4 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது. 

அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அந்த 4 இளைஞர்களும் தங்கள் முகத்தில் துணியை கட்டியிருந்தனர். இதுபோல், திருநெல்வேலி டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து மவுன்ட் ரோட்டுக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாயிலிலும் 4 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் கீழ முன்னீர் பள்ளம் பகுதியில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசிய அதே 4 பேர் தான் டவுன் பகுதியிலும் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.