தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் தடையை மீறி இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் மேயர் உத்தரவின் பேரில், ஆணையர் ஆலோசனையின் பேரில் மாநகராட்சி மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் அதிகாரிகள் ஜெயராஜ் ரோடு பூ மார்க்கெட் அருகில் உள்ள கடையில் சோதனையிட்டனர்.
சோதனையில் அங்கிருந்த ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் டம்பளர்கள், பாலித்தீன் பைகள் என 1.5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6லட்சம் ஆகும்.
ஒருமுறை பயன்படுத்தி விட்டு குப்பையில் வீசி எறியப்படும் பாலிதீன் பை, கப் போன்றவைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தடையை மீறி பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.