பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஒரு தனியார் ஆடிட்டரின் நம்பிக்கையை முறியடித்த அவரது நீண்ட கால டிரைவர். கடந்த 10 ஆண்டுகளாக ஆடிட்டருடன் வேலை பார்த்துவரும் ராஜேஷ் என்ற டிரைவர் மீது ஆடிட்டருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர் ராஜேஷிடம் பணம் நிறைந்த பேக் ஒன்றை கொடுத்து, தனது காரில் வைக்கும்படி கூறினார்.
சிறிது நேரத்தில் வங்கிக்கு செல்லும் திட்டத்துடன் அவர் வீட்டு படிக்கட்டில் இறங்கி வந்தபோது, காரும், டிரைவரும் காணாமல் போனதை பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்தார். தனது டிரைவருக்கு தொடர்பு கொண்டு அழைத்தபோது, ராஜேஷ் மருந்து வாங்க சென்றுள்ளதாகவும், 10 நிமிடங்களில் திரும்புவதாகவும் கூறினார். ஆனால், அவர் திரும்பவில்லை. பின்னர் ஆடிட்டர் அவசரமாக அலுவலகம் சென்று காரை கண்டுபிடித்தார்.
ஆனால் ராஜேஷ் காணவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை தேடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்காக ஆஜராகிய ராஜேஷ், பணத்தை எடுத்தது உண்மை என ஒப்புக்கொண்டார். ஒரு லட்ச ரூபாயில் தனது குடும்பத்திற்கான தேவையான பொருட்களை வாங்கியதாகவும் தெரிவித்தார்.
மேலும், எஞ்சிய பணத்தை ஒரு கோயிலின் உண்டியலில் போட்டுவிட்டதாக ராஜேஷ் கூறியது மிகவும் அதிர்ச்சியளித்தது. இதனால் போலீசார் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஏனெனில், கோயில் உண்டியலில் போடப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் அனைத்தும் கோயிலுக்கே சொந்தமாகிவிடுகிறது. எனவே, அந்த பணத்தை மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், போலீசார் ராஜேஷ் மீது திருட்டு குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த அக்டோபரில் நடந்த மற்றொரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. அப்போது, சென்னையிலுள்ள திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன் தவறுதலாக விழுந்தது.
அதனை கோயில் நிர்வாகம் திருப்பிக்கொடுக்க மறுத்து, “இது கோயிலுக்கு சொந்தமானது” என்று கூறியது. தற்போது பெங்களூரு சம்பவத்திலும் அதே நிலை ஏற்பட்டுள்ளதால், போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.