ஊஞ்சல் விளையாடியதில் சேலை இறுக்கி மாணவி உயிரிழந்த சோகம்!
Dinamaalai May 18, 2025 04:48 PM

பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருவர், எதிர்பாராத விதமாக கழுத்தை சேலை இறுக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈ.பி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ரேகா. இவர்களது மகள் பாக்கியா (11), ஆரணியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் மாலை நேரத்தில் தனது வீட்டில் சேலை கட்டி ஊஞ்சல் விளையாடி இருக்கிறாள். அப்போது அவரது கழுத்தில் சேலை இறுக்கி மூச்சு திணறி மயங்கினாள். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஊஞ்சலில் விளையாடிய சிறுமி சேலை இறுக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.