ஆம்னி வேன் ஒன்று தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.வேனில் 8 பேர் பயணித்த நிலையில், இதில் 3 பேர் விபத்து நடந்தவுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் 5 பேர் வேனுடன் கிணற்றுக்குள் மூழ்கினர். அக்கம்பக்கத்தினர் போலீஸ், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தீயணைப்புத் துறை, காவல்துறையுடன் உள்ளூர் மக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கிணறு ஆழமாக இருந்ததாலும் அடியில் சக்தியாக இருந்ததாலும் மீட்பு பணி சவாலாக அமைந்துவிட்டது. ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் கிரேன் மூலம் வேனை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர், 4 மணி நேர போராட்டத்துக்கு பின் கிரேன் மூலம் வேன் மீட்கப்பட்டது. வேனில் இருந்து பெண், ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இறுதியில், மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம்-2 கிராமத்தில் கிணற்றில் விழுந்த 5 நபர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கரூரில் ஆம்னி பஸ் – சுற்றுலா வேன் மோதி சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த கோர விபத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.