ரசிகர்கள் அதிர்ச்சி.... பிரபல நடிகை நுஷ்ரத் பரியா கொலை வழக்கில் கைது!
Dinamaalai May 20, 2025 05:48 PM

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா (31) கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்தாண்டு ஜூலை மாதத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்தது. இதில் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக நுஷ்ரத் பரியா மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், வெளிநாட்டுக்கு செல்ல டாக்காவின் ஷாஜகான்லால் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது நுஸ்ரத் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரின் வழக்கறிஞர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவரது மனு மே 22ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

நடிகை நுஸ்ரத் பரியா தாய்லாந்துக்கு பயணிக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால், விமான நிலையத்தில் அவர் போலீசாரால் தடுத்துநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஷேக் முஜிபுர் ரஹ்மான் பற்றிய 'முஜிப் தி மேக்கிங் ஆப் ஏ நேஷன்' என்ற வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவாக நடித்ததற்காக நுஸ்ரத் பரியா நன்கு அறியப்பட்டவர். இந்த படம் பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தை வங்கதேசம் மற்றும் இந்தியா இணைந்து தயாரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.