மேற்கு வங்கத்தில் ஒரு கோடி ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம் வாக்காளர்கள்: பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு
WEBDUNIA TAMIL August 03, 2025 02:48 PM

பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக அரசியல் சர்ச்சை நீடித்து வரும் நிலையில், மேற்கு வங்காளத்திலும் இதேபோன்ற வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்காளத்தில் ஒரு கோடி ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம் வாக்காளர்கள் சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹவுராவில் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, மேற்கு வங்காளத்தின் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள், இரட்டை பதிவுகள் மற்றும் போலி வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளதாக கூறினார்.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, சட்டவிரோத வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கியா சமூகத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களை பாதுகாக்க மாநில நிர்வாகத்தை தவறாக பயன்படுத்துகிறது என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலையும் அளிக்கவில்லை.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.