கேரளாவின் கண்ணூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் ஓம்னி பஸ்சில் பயணித்த 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு உள்ளான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் சிறுமியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு பயணித்தனர். அந்த பஸ், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நள்ளிரவில் வந்த போது, அந்த பஸ்சின் மாற்று டிரைவரான விருதுநகர் பாளையம்பட்டியைச் சேர்ந்த ஞானவேல் (வயது 40), சிறுமி தூங்கிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்று, ஆபாசமாக தன்னுடைய செல்போனால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த செயலை அருகில் இருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். பிறகு, டிரைவரிடம் செல்போனை தரும்படி கோரியபோது, அவர் தன்னால் எந்த தவறும் செய்யவில்லை என மறுத்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஞானவேலிடம் இருந்து செல்போனை எடுத்தனர். அதில், அந்த சிறுமியின் புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து பஸ் அதிகாலை 3.30 மணியளவில் விழுப்புரம் வந்ததும், அந்த பஸ்சை பயணிகள் உதவியுடன் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்குள் கொண்டு சென்ற சிறுமியின் பெற்றோர், ஞானவேலை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மகளிர் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஞானவேலை குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும், அவர் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்து, அதில் உள்ள ஆவணங்களை மேலதிக சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பஸ்சில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.