அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த டெஸ்லா கார் விபத்து வழக்கில், பல மாத விசாரணைக்கு பிறகு, நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. அன்சில் மெக்கீ என்ற நபர் தனது டெஸ்லா மின்சார காரில் “ஆட்டோபைலட்” வசதியை இயக்கி பயணித்தபோது, தனது மொபைல் போன் கீழே விழ, அதை எடுக்க குனிந்துள்ளார்.
அதே நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் மோதியது. இதனால் 22 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
இந்த கோர சம்பவத்திற்கு நீதி கேட்டு, பாதிக்கப்பட்டரின் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். புளோரிடா மாநில நீதிமன்றம் சமீபத்தில் தனது தீர்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி, இழப்பீடாக மொத்தம் 329 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதில், டெஸ்லா நிறுவனம் 242 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,996 கோடி) செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையை கார் ஓட்டுநர் அன்சில் மெக்கீ ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது..
இந்த தீர்ப்பு, டெஸ்லாவின் “ஆட்டோபைலட்” தொழில்நுட்பத்தினால் ஏற்படும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அதேசமயம், இவ்விவாத தீர்ப்பை டெஸ்லா நிறுவனம் ஏற்க மறுத்து, மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விவாதம் இன்னும் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.