கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஆசிரியர்களில் சிலர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததாக பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஆசிரியர்களில் சிலர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில். அப்பள்ளி மாணவிகள் சிலர், ஆசிரியர்களின் பாலியல் சீண்டல்கள் நடப்பதாக வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் என்பவர் பாடம் கற்பிக்கும் குரு மட்டுமல்ல. தந்தயாக, சகோதரனாக இருந்து வாழ்விற்கு வழிகாட்ட வேண்டியவர். அப்படி நடக்கும் என்று நம்பிதான் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடந்து கொள்வது பெரும் கொடுமை. இத்தகைய பாலியல் சீண்டல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே பாதுகாப்பு இல்லை என்பதை தமிழக அரசு அவமானமாக கருத வேண்டும். பாலியல் சீண்டல்கள் நடந்த கிணத்துக்கடவு மேல்நிலைப்பள்ளி அரசுப் பள்ளி என்பதால், மாணவிகளின் பாதுகாப்பிற்கு தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, தங்களின் கடமையை உணர்ந்து பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.