மாதம்பட்டி ரங்கராஜிக்கு முதல் திருமணம் ஆனதே எனக்குத் தெரியாது! கருவைக் கலைக்கச் சொல்லி என்னை அடித்தார்! ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்!
Seithipunal Tamil August 31, 2025 01:48 AM

திரைப்பட நடிகர் மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜைச் சுற்றி புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, “என்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கினார். பின்னர், கருவைக் கலைக்கச் சொல்லியும், தன்னை அடித்து துன்புறுத்தியும் விட்டார்” என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், 2019-ல் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் கேசினோ, மிஸ் மேகி, பென்குயின் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதோடு, தற்போது விஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார்.
சமையல் துறையில், தமிழகத்தில் பல செல்வாக்குமிக்க நபர்களின் திருமணம், சுப நிகழ்வுகளில் கேட்டரிங் செய்யும் முக்கிய நபராகவும் ரங்கராஜ் அறியப்படுகிறார்.

அவருக்கு ஏற்கெனவே அவரது மாமன் மகள் ஸ்ருதியுடன் திருமணம் செய்யப்பட்டு, இரு குழந்தைகளும் உள்ளனர்.ஜாய் கிரிஸில்டா, 2018-ல் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக்கை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2023-ல் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தார். அதன் பிறகு, மாதம்பட்டி ரங்கராஜுடன் நெருக்கமாக பழகினார்.சமீப மாதங்களில், “ரங்கராஜ் தன்னுடன் திருமணம் செய்து கொண்டார்” என்று புகைப்படங்களையும், மருத்துவமனை பரிசோதனை புகைப்படங்களையும் வெளியிட்டார். அவர் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தைக்கு “ராஹா” என பெயர் சூட்டியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். கூடுதலாக, இருவரும் முத்தமிடும் வீடியோவையும் வெளியிட்டு, “இதை ரங்கராஜ் தான் எடிட் செய்தார்” என குற்றம்சாட்டினார்.

ஆனால், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் நடத்தினார் என்ற கேள்விகள் எழுந்தபோது, ரங்கராஜ் எந்த விளக்கமும் தரவில்லை. மாறாக, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுடன் இருந்த புகைப்படங்களையெல்லாம் நீக்கி விட்டார்.

இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். அதில்,
“நானும் ரங்கராஜும் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். பின்னர் எம்.ஆர்.சி. நகர் அம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். ஆனால் அதை பதிவு செய்யவில்லை. நான் எங்கள் உறவையும், கர்ப்பத்தையும் வெளிப்படையாகப் பேசிய பிறகு, ரங்கராஜ் என்னை சந்தித்து கருவைக் கலைக்கச் சொல்லி அடித்து துன்புறுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், மாதம்பட்டி ரங்கராஜிடம் போலீஸார் விசாரணை நடத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுவரை இந்நிலையில் எந்த விளக்கமும் தராத ரங்கராஜ், இனி வாய்விட்டு பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையிலும், ஊடக உலகிலும் அதிகரித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.