பிறந்து 48 மணி நேரம் ஆன குழந்தைகளை எலிகள் கடித்ததால் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையின் அவலம்..!
Webdunia Tamil September 03, 2025 08:48 AM

மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில், பிறந்த குழந்தைகள் எலிகளால் கடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைகள் இரண்டு, கடந்த 48 மணி நேரத்தில் எலிகளால் கடிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ஒரு குழந்தையின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதியையும் எலிகள் கடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒன்று, கார்கோன் மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி, மருத்துவமனையில், குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில், 24 மணி நேரமும் கண்காணிப்புடன் செயல்படுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் யாதவ் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.