ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உள்ள படம் மதராஸி (Madharaasi ). இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஹீரோயினாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். மேலும் வித்யூத் ஜமால், பிஜூ மேனன், விக்ராந்த், ஷபீர் என பலரும் நடித்துள்ள நிலையில் இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் கேரியர் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில் அதில் முதல் படமாக மதராஸி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் விமர்சனம் பற்றி காணலாம்.
படத்தின் கதைவட இந்தியாவில் இருந்து தமிழகத்தில் ஆயுத கலாச்சாரத்தை புழக்கத்தில் கொண்டு வருவதற்காக ஆறு கண்டெய்னர் லாரிகளில் துப்பாக்கிகள் கொண்டு வரப்படுகிறது. பல தடைகளை கடந்து சென்னையில் இருக்கும் தொழிற்சாலைகளில் துப்பாக்கிகளை பதுக்குவதற்கு காவல் துறையினர், அரசியல் பிரமுகர்கள், சமூகவிரோதிகள் என பலரும் உதவுகின்றனர். இந்த கும்பலை பிடிக்க நேர்மையான போலீஸ் அதிகாரியான பிஜுமேனன் களமிறங்குகிறார்.
இதையும் படிங்க: மதராஸி படம் எப்படி இருக்கு? – ரசிகர்களின் விமர்சனம் இதோ!
அவர் தனது குழுவில் சிவகார்த்திகேயனை தேர்வு செய்கிறார். ஏற்கனவே காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் யார் ஆபத்தில் இருந்தாலும் தன்னையும் மீறி உதவி செய்யும் குணம் படைத்தவராக உள்ளார். அப்படியான நிலையில் இந்த ஆயுதக் கடத்தலை தடுக்க சிவகார்த்திகேயன் போலீஸிற்கு எப்படி உதவினார் என்பதே மதராஸி படத்தின் சுருக்கமான கதை அம்சமாகும்.
படம் எப்படி?பொதுவாக முன்னணி ஹீரோவாக மாறும் பட்சத்தில் கதையில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகள் இருந்தால் போதும் என நினைக்கும் கோலிவுட் சினிமாவில் சிவகார்த்திகேயன் அதனை பின்பற்றாமல் இருப்பதே மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் புகுந்து விளையாடும் அவர் தனி மனிதனாக படத்தை தாங்கிப் பிடிக்கிறார். காதல், செண்டிமெண்ட், காமெடி என அனைத்து இடங்களிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
நிச்சயமாக இடைவேளை காட்சி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹீரோயினாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் காதல் காட்சிகளில் லைக்ஸை அள்ளுகிறார். அதேசமயம் விக்ராந்த், பிஜுமேனன், வித்யூத் ஜமால், ஷபீர் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். பொதுவாக ஆக்ஷன் காட்சிகள் படத்தில் சில இடங்களில் தேவையில்லாமல் செருகப்பட்டு இருக்கும்.
இதையும் படிங்க: தூங்கி எழுந்ததும் ரஜினிகாந்தா மாறியிருந்தா இதுதான் பண்ணுவேன் – சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய விசயம்
ஆனால் அவை இந்த படத்தில் மைய கதையிலிருந்து விலகாமல் இருப்பதே பெரிய பலமாக அமைந்திருக்கிறது. வில்லன் கேரக்டரும் சரியான அமைக்கப்பட்டு இருப்பது பலமாக உள்ளது. ஆனால் ட்ரெய்லரில் வருவது போல் அடுத்து நடக்கப் போவது இதுதான் என கணித்து விடும் அளவுக்கு பலவீனமான திரைக்கதை இருப்பது குறை என சொல்லலாம். மற்றபடி முழு படமாக பார்க்கும் போது மதராஸி தியேட்டரில் கண்டு ரசிக்க ஒரு சிறப்பான படமாகும்.