சென்னை நகரில் கட்சி தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே நீண்டநாள் பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில் சமீபத்தில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகம் அருகே, ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விசிக (விடுதலை சிறுத்தைகள் கட்சி) உறுப்பினர்கள் இடையே திடீர் மோதல் வெடித்தது.
தகவலின்படி, விசிகவினர் ஏர்போர்ட் மூர்த்தியை சரமாரியாக தாக்கினர். இதற்கு பதிலடி கொடுத்த ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர் பாக்கெட் கத்தியை பயன்படுத்தி விசிகவினரை காயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, விசிக சார்பில் சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. தாக்குதலில் விசிகவினர் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், மூர்த்தி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டது.
இந்த புகாரின் பேரில், டி.ஜி.பி அலுவலக வாசலில் கத்தியை வைத்துத் தாக்கிய வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்துள்ளனர்.சம்பவத்தால் சென்னை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.