கோவை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பிரிவுகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லவும், சிகிச்சை முடிந்த பின் வார்டுகளுக்கு திரும்பச் செய்யவும் ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 70 வயதான தந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்த மகன், சிகிச்சை முடிந்து கட்டு போடப்பட்ட தந்தையை வீடு திரும்பச் செய்வதற்காக சக்கர நாற்காலி கேட்டதாக கூறப்படுகிறது. வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் வரை நீண்ட தூரம் இருந்ததால், அவர் நடக்க முடியாது என்பதால் மகன் சக்கர நாற்காலி தருமாறு கேட்டார்.
ஆனால், ஊழியர்கள் காத்திருக்கும்படி கூறிய நிலையில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் சக்கர நாற்காலி கிடைக்கவில்லை. இதனால், மகன் தந்தையை தனது உடலில் சாய்த்துக் கொண்டு மேல்தளத்திலிருந்து இறங்கி, இழுத்தபடியே மருத்துவமனை வாயிலில் நின்ற வாகனத்துக்கு அழைத்துச் சென்றார்.
இந்த காட்சி அங்கு இருந்த சிலரால் மொபைலில் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து பெரும் அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையில் பணியாற்றிய எஸ்தர் ராணி மற்றும் மணிவாசகம் எனும் ஊழியர்கள் இருவரும் தங்களின் கடமையில் அலட்சியம் காட்டியதாக கண்டறியப்பட்டதால், 5 நாட்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.