புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையின் வெளிப்பாடாக விஜய் உருவாகியுள்ளார். அதனால்தான் பெண்களும் இளைஞர்களும் பெருமளவில் அவரைச் சுற்றி கூடுகிறார்கள். ஆனால் விஜய் மட்டும் தனியாக ஆட்சி அமைத்துவிடுவது சாத்தியமில்லை. நல்ல கூட்டாளர்களைச் சேர்த்துக் கொண்டால் அவரது தேர்தல் வியூகம் வலிமை பெறும்” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “1967 முதல் தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. இந்த நீண்டகால ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தியே தற்போது விஜய் நடத்தும் நிகழ்ச்சிகளின் பெரும் திரளுக்கு காரணம்.
இது தமிழகத்தில் மாற்றம் வேண்டும் எனக் கூறும் மக்களின் உணர்வுகளின் வடிகாலாக விஜய் இருப்பதை காட்டுகிறது. ஆனால் இந்தச் செல்வாக்கு வாக்குகளாக மாறுமா என்பது அவரது தனிப்பட்ட திறமையையும் கட்சியின் தேர்தல் திட்டங்களையும் பொறுத்தது.
விஜயின் வெற்றி கூட்டணி அரசியலுடன் மட்டுமே சாத்தியமானது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாக இயங்கினால், தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். தற்போதைய அமைச்சர்களாலும் சட்டப்பேரவை உறுப்பினர்களாலும் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
எங்களைப் போன்ற கட்சிகள் ஆட்சியில் பங்கு பெற்றால்தான் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஆட்சியில் பங்கு என்பது வெறும் கோஷமல்ல, 2026 தேர்தலின் முக்கிய இலக்கு” என்றார்.