Ilayaraja: தமிழ் சினிமாவில் மட்டுமல்ல. இந்திய சினிமாவிலும் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. 80களில் முழுக்க முழுக்க இவரின் இசை ராஜ்யம்தான். அன்னக்கிளி படத்தில் துவங்கிய இசை பயணம் 50 வருடங்களை கடந்தும் இன்னும் நிற்கவில்லை. 84 வயதிலும் இன்னும் திரைப்படங்களுக்கு இசையமைப்பது, பின்னணி இசை அமைப்பது, இசைக்கச்சேரிகளை நடத்துவது, சிம்பொனி இசைப்பது என முப்பது வயது இளைஞன் போல ஓடிக் கொண்டிருக்கிறார்.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இப்போதும் ரசிப்பது இளையராஜாவின் பாடல்களைத்தாதான். இந்நிலையில்தான் சிம்பொனி இசையை உருவாக்கியதற்காகவும் திரைத் துறையில் 50 வருடங்களை தொட்டதற்காகவும் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த மேடையில் இளையராஜா பற்றி ரஜினி சொன்ன ஒரு ரகசியம் பலரையும் சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருக்கிறது.
மேடையில் இளையராஜா பேசிக் கொண்டிருந்தபோது ‘ரஜினி என்னிடம் ஒரு விஷயம் சொன்னார்.. நீங்க, இயக்குனர் மகேந்திரன், நான் மூணு பேரும் சேர்ந்து குடிச்சோம்.. ஹாப் பீர் குடிச்சிட்டு நீங்க என்ன பண்ணீங்க. அதபத்தி மேடையில் சொல்ல போறேன்’ என சொன்னார். ‘நீங்க என்னவேணா சொல்லுங்க’ என சொன்னேன்’ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது ரஜினி கீழே இருந்து மேடைக்கு வந்து மைக்கை பிடித்து ‘ஜானி பட சூட்டிங் விஜிபி-யில நடந்து கொண்டிருந்தது.
ஷூட்டிங் முடிச்சிட்டு நான் அங்கேயே நைட்டு தங்கிட்டேன். அப்ப நானும் மகேந்திரனும் ட்ரிங்க்ஸ் எடுத்தோம்.. அப்ப இவர் வந்தாரு ‘சாமி கொஞ்சம் போடுறீங்களா?’ன்னு கேட்டோம்.. சரின்னாரு.. ஹாப் பீர் குடிச்சிட்டு இவரு போட்டு ஆட்ட இருக்கே… நைட்டு மூணு மணி வரைக்கும் ஆட்டம் போட்டாரு.. ஊர்ல இருக்குற கிசுகிசு பாத்தியெல்லாம் கேட்டாரு.. குறிப்பா நடிகைகள் பத்திலாம் கேட்டாரு.. இவர் மனசுக்குள்ள அவ்ளோ லவ் இருக்கு.. அந்த லவ்தான் இப்படி இவ்ளோ அழகான பாட்டை வெளிவந்தது. இன்னும் நிறைய இருக்கு.. அப்புறம் வச்சிக்கிறேன்’ என சொல்லிவிட்டு கீழே போய்விட்டார்.
ரஜினியின் இந்த பேச்சை கேட்டு அரங்கில் இருந்த எல்லோரும் சிரித்தார்கள். ’போற போக்குல ரஜினி இல்லாததெல்லாம் சொல்லிட்டு போயிட்டாரு’ என இளையராஜா ஒருமாதிரி சமாளித்தார்.